செஞ்சி அருகே பஸ்சில் தவறவிட்ட நகையை மீட்டு கொடுத்த போலீசாருக்கு பாராட்டு

செஞ்சி அருகே பஸ்சில் பயணி தவற விட்ட நகையை மீட்டு கொடுத்த போலீசாருக்கு பாராட்டு குவிந்து வருகிறது.

Update: 2024-06-27 17:39 GMT

நகை ஒப்படைப்பு

திருவண்ணாமலையில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு செஞ்சி, ஒலக்கூர் வழியாக அரசு பஸ் ஒன்று நேற்று முன் தினம் சென்னை நோக்கி புறப்பட்டு சென்றது. இந்த பஸ்சில் செஞ்சி அருகே துறிஞ்சி பூண்டி கிராமத்தை சேர்ந்த சங்கர் (வயது 45) என்பவர் தனது மனைவி நிஷாந்தி மற்றும் குழந்தையுடன் பயணம் செய்தார்.

பஸ் செஞ்சி பஸ் நிலையம் வந்ததும் அதில் இருந்து அவர்கள் இறங்கினர். இதையடுத்து அங்கிருந்து பஸ் சென்னை நோக்கி புறப்பட்டு சென்றது. இந்த நிலையில் சங்கர் தான் கொண்டு வந்த 1½ பவுன் நகை, வெள்ளி கொலுசு மற்றும் 45 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை வைத்திருந்த பையை பஸ்சில் தவற விட்டது தெரிந்தது.

உடனே அவர் இது குறித்து செஞ்சி போலீசில் புகார் தெரிவித்தார். இதையடுத்து அவர்கள், இது குறித்து ஒலக்கூர் போலீசாருக்கு தகவல் தெரி வித்தனர்.

இதனிடையே அந்த பஸ் ஒலக்கூர் பகுதியில் சென்று கொண்டிருந்தது. இதைபார்த்த போலீசார் உடனே அந்த பஸ்சை தடுத்து நிறுத்தி அதில் சங்கர் தவற விட்டு சென்ற நகை மற்றும் பணம் வைத்திருந்த பையை மீட்டனர்.

பின்னர் சங்கரை வரவழைத்து அதனை அவரிடம் ஒப்படைத்தனர். பயணி தவற விட்ட நகை பையை துரிதமாக செயல்பட்டு மீட்டு கொடுத்த போலீசாரை பொதுமக்கள் பலரும் பாராட்டினர்.

Tags:    

Similar News