அரகண்டநல்லூர் அருகே அரவாணி தாலி கட்டும் நிகழ்ச்சி

அரகண்டநல்லூர் அருகே அரவாணி தாலி கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.

Update: 2024-04-24 05:39 GMT

தாலி கட்டும் நிகழ்ச்சி

அரகண்டநல்லூர் அருகே பிரசித்தி பெற்ற கூத்தாண்டவர் கோவிலில் 519 ஆண்டு அரவாணிகள் தாலி கட்டும் நிகழ்ச்சி மற்றும் அழகி போட்டி வெகு விமர்சையாக நடைபெற்றது. விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் அருகே உள்ளது அருணாபுரம் கிராமம். இந்த கிராமத்தில் பிரசித்தி பெற்ற கூத்தாண்டவர் கோவில் 519ஆம் ஆண்டு பங்குனி உத்திர திருவிழா 15 நாட்களாக வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. தினசரி மகாபாரத சொற்பொழிவு மற்றும் பல்வேறு புராண நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தன. இதையடுத்து இன்று அரவாணிகள் தாலி கட்டும் நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த நிகழ்வை ஒட்டி, பல்வேறு பகுதிகளில் இருந்து அரவாணிகள் கலந்துகொண்டு தங்களது குலதெய்வமான அரவணை வழிபட்டு தாலி கட்டிக் கொண்டனர். குழந்தை பாக்கியம் பெற்றவர்கள் குழந்தைகளின் எடைக்கு இணையாக எடைக்கு எடை காசுகளை வழங்கி தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றினர். இதனைத் தொடர்ந்து, நாளை தாலி அறுக்கும் நிகழ்ச்சியும், தொடர்ந்து இந்திர விமானத்தில் திருமண கோலத்தில் வீதி உலா நிகழ்ச்சியும் நடைபெற இருக்கிறது. பக்தர்கள் ஆடு, கோழி பலியிடும் நிகழ்ச்சியும் நடைபெற இருக்கிறது. தாலி கட்டும் நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு கூத்தாண்டவரை வழிபட்டு சென்றனர். இந்த ஆண்டு முதன்முறையாக திருநங்கைகள் கலந்துகொண்ட நடன நிகழ்ச்சி மற்றும் அழகிப் போட்டி நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News