சேலத்தில் அதிகாலை 3 மணிக்கு மனைவியிடம் தோசை கேட்டு தகராறு
சேலம், அம்மாப்பேட்டை வரகம்பாடியில் அதிகாலை மூன்று மணிக்கு தோசை கேட்டு மனைவியை தாக்கிய கணவரை போலீசார் கைது செய்தனர்.
சேலம் அம்மாப்பேட்டை வரகம்பாடி கீழத்தெருவை சேர்ந்தவர் மணிவேல் (வயது 36), கார் டிரைவர். இவருடைய மனைவி லோகாம்பாள் (34). இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். மணிவேலுக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளது. இவர் தினமும் வேலைக்கு சென்றுவிட்டு இரவில் தாமதமாக வீட்டுக்கு வருவதால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. கடந்த 23-ந் தேதி அதிகாலை 3 மணியளவில் மணிவேல் தனது வீட்டுக்கு வந்துள்ளார்.
அப்போது, அவர் தனது மனைவி லோகாம்பாளிடம் தோசை சுட்டுத்தரும்படி கேட்டதாக தெரிகிறது. இதனால் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றிய நிலையில், லோகாம்பாளை மணிவேல் சரமாரியாக தாக்கி உள்ளார். இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதுகுறித்து அம்மாப்பேட்டை போலீஸ் நிலையத்தில் லோகாம்பாள் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிவேலை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.