நிலம் வாங்கி தருவதாக மோசடி ரூ.1 கோடி ஏமாற்றியவர் கைது !
நிலம் வாங்கி தருவதாக மோசடி ரூ.1 கோடி ஏமாற்றியவர் கைது செய்யப்பட்டார்.
பெரம்பூரைச் சேர்ந்த ஹேமந்த் குமார் ஜெயின், 54, என்பவர், கடந்த 2022 ஆகஸ்டில், ஆவடி மத்திய குற்றப் பிரிவில் புகார் ஒன்றை அளித்திருந்தார். புகாரில் கூறப்பட்டுள்ளதாவது: 'நான் ரசாயன பொருட்கள் வியாபாரம் செய்து வருகிறேன். அதற்காக குடோனுக்கு இடம் தேடினேன். அப்போது, திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி, விளாங்காடுபாக்கம் கிராமத்தில், 67.5 சென்ட் நிலத்தை, 1 கோடியே 1 லட்சம் ரூபாய்க்கு விலை பேசினேன். அதன்படி, கமலா என்பவரிடம் 6 லட்சம் ரூபாய் கொடுத்து, ஒப்பந்த பத்திரம் பதிவு செய்து கொண்டேன்.
பின், கடந்த ஆண்டு பல தவணையாக, மீதமுள்ள தொகையை வரைவோலையாக கொடுத்து, செங்குன்றம் சார் - பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்து கொண்டேன். சில நாட்களுக்குப் பின், ஆவணத்தை வாங்க சென்ற போது, ஆள்மாறாட்டம் செய்து பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறி, சார் - பதிவாளர் ஆவணங்களை தர மறுத்தார். என்னை மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது. ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கர் உத்தரவுப்படி வழக்குப்பதிவு செய்த ஆய்வாளர் வள்ளி, தலைமறைவாக இருந்த திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையைச் சேர்ந்த மகாராஜா, 40, என்பவரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நேற்று சிறையில் அடைத்தனர்.