மாட்டுவண்டியில் ஊர்வலமாக வந்த மணமக்கள்... ரசித்த பொதுமக்கள்...

பேராவூரணியில் புதுமணத் தம்பதிகள் மாட்டு வண்டியில் ஊர்வலமாக சென்றது பேசுபொருளாகி உள்ளது

Update: 2024-02-12 06:37 GMT
தஞ்சாவூர் மாவட்டம்,  பேராவூரணி அருகே பூக்கொல்லை பகுதியைச் சேர்ந்த ராமச்சந்திரன் - பழனியம்மாள் இவர்களின் மகன் ஆர்.வெங்கடேஷ், பேராவூரணி அருகே நடுவிக்குறிச்சி பாதகுமார் - விஜயராணி இவர்களின் மகள் பி.நாகஜோதி இவர்களுக்கு பெரியோர்களால் திருமணம் நிச்சயிக்கப்பெற்று, ஞாயிற்றுக்கிழமை காலை ஆத்தாளூர் அருள்மிகு வீரமாகாளியம்மன் கோவிலில் திருமணம் நடைபெற்றது. மணமகன் ஆர்.வெங்கடேஷ் சிங்கப்பூரில் எலக்ட்ரிக்கல் இன்ஜினியராக வேலை செய்து வந்தாலும், இவர்களது குடும்பம் பாரம்பரிய விவசாய குடும்பம். இதனால் தன்னுடைய திருமணத்தை பாரம்பரிய முறைப்படி, விவசாயக் குடும்பங்களுக்கு எப்பொழுதும் உறுதுணையாக இருக்கும் மாடுகளும் தங்களுடைய திருமணத்தில் பங்கு பெற வேண்டுமென நினைத்த வெங்கடேஷ், தன்னுடைய நண்பர்களிடம் இதை தெரிவித்துள்ளார்.  இதையடுத்து, மணமகனின் நண்பர்கள் தங்களுடைய நண்பனின் விருப்பப்படி, திருமணத்தை வெகு விமர்சையாக மாடுகளை வைத்து ஊர்வலம் நடத்திட வேண்டும் என முடிவெடுத்தனர்.  இதையடுத்து, ஆத்தாளூர் வீரமாகாளி அம்மன் கோவிலில் ஞாயிற்றுக்கிழமை காலை திருமணம் முடிந்த பிறகு மணமக்கள் இருவரையும் அலங்கரிக்கப்பட்ட மாட்டு வண்டியில் ஏற, மாட்டு வண்டியை மணமகன் ஓட்ட, சுமார் 2 கிலோமீட்டர் வரை ஊர்வலமாக வந்தனர்.  முதன்மை சாலை வழியாக திருமண விருந்து நடைபெற்ற எஸ்.என்.வி திருமண மண்டபம் வரை, தோழிகள் கேலி, கிண்டல் உற்சாகத்துடன்,  மணமகள் வெட்கப் புன்னகையுடன் மாட்டு வண்டியில் அமர்ந்து மண்டபம் வந்தடைந்தார்.  மணமகனான நண்பனின் ஆசையை நிறைவேற்றிய நண்பர்கள், இதற்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர். இந்த திருமணத்திற்கு வந்த உறவினர்கள், பெரியோர்கள் நண்பர்கள், ஊர் முக்கியஸ்தர்கள் இதனை வெகுவாக பாராட்டி சென்றனர்.  பொதுவாக திருமணங்களில் குதிரை சாரட் வண்டிகளிலும் காரிலும், மணமக்கள் ஊர்வலமாக வருவதை பார்த்திருப்போம். இது பாரம்பரிய முறையில் நடைபெற்றதை உணர்த்தும் விதமாக இருந்ததால், பேருந்துகளில் சென்ற பயணிகள், சாலையில் சென்ற பொதுமக்கள் வேடிக்கை பார்த்தவாறு சென்றனர். மேலும், பேராவூரணியில் இவர்களுடைய திருமணம் பேசு பொருளாகியுள்ளது.
Tags:    

Similar News