கத்தி முனையில் பணம், செல்போன் பறிப்பு -சகோதாரர்கள் உள்பட 6 பேர் கைது
சேலத்தில் நடந்து சென்றவாலிபர்களிடம் கத்திமுனையில் பணம், செல்போன்கள் பறித்து சென்ற அண்ணன், தம்பி உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
சேலம் அழகாபுரம் பெரியபுதூர் பகுதியை சேர்ந்தவர் ஜமால் (24), கூலித்தொழிலாளி. இவர் தனது நண்பர்களான அதே பகுதியை சேர்ந்த சேட்டுகுமார், ரமேஷ்குமார், தீபக்குமார் ஆகியோருடன் கடந்த 14-ந் தேதி குமரன் நகர் பகுதியில் நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த 6 பேர் அவர்களை வழிமறித்தனர். பின்னர் அந்த நபர்கள் கத்திமுனையில் மிரட்டி 4 பேரிடம் இருந்தும் 3 செல்போன்கள் மற்றும் ரூ.15 ஆயிரம் ஆகியவற்றை பறித்து கொண்டு தப்பி சென்றுவிட்டனர்.
இதுகுறித்து அழகாபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜேந்திரன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது இந்த வழிப்பறியில் ஈடுபட்டது பெரியபுதூர் பகுதியை சேர்ந்த சந்தோஷ்குமார் (23), அவரது தம்பி சதீஷ்குமார் (22) மற்றும் 16 வயதுடைய 4 சிறுவர்கள் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 6 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.