ஆத்தூர்: 20 நிமிடம் யோகாசனம் இரண்டு சிறுமிகள் சாதனை
ஆத்தூரில் 20 நிமிடம் 24 நொடிகள் யோகாசனம் செய்த இரண்டு சிறுமிகளின் உலக சாதனையை ‘நோபல் வேர்ல்ட் ரெக்கார்ட்’ நிறுவனம் திறமையை அங்கீகரித்து சான்றிதழ் வழங்கியது.
சேலம் மாவட்டம் ஆத்தூரில் பரிமளா என்பவர், யோகா பயிற்சி மையம் நடத்தி வருகிறார். இதில் ஒன்றாம் வகுப்பு பயிலும் சிறுமி தமிழாழினி, 6, மற்றும் இரண்டாம் வகுப்பு பயிலும் சிவன்யா, 7, ஆகியோர் யோகா பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்த சிறுமிகள், உலக சுகாதார தினத்தையொட்டி யோகா மூலம் உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் 20 நிமிடம் 24 நொடிகள் யோகா செய்து அசத்தினர்.
இதில் தமிழாழினி மத்தியாசனம் செய்தும், சிவன்யா பூர்ண பஞ்சாசனம் செய்தும் சாதனை படைத்தனர். இவர்களது சாதனையை பாராட்டி நோபல் உலக சாதனை புத்தகத்தின் இயக்குனர் ஹேமலதா உலக சாதனையாக அங்கீகரித்து அதற்கான சான்றிதழ் மற்றும் பதக்கத்தையும் வழங்கினார். சிறுவயதில் யோகாவில் உலக சாதனை படைத்த சிறுமிகளை சக யோகா மாணவர்களும், பெற்றோர்களும் வாழ்த்தினர்.