வன்கொடுமை விழிப்புணர்வு பயிற்சி மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற்றது

வன்கொடுமை விழிப்புணர்வு பயிற்சி, குழந்தை திருமணம், உயர்கல்வி மற்றும் இயற்கை வளம் பாதுகாத்தல் குறித்த கருத்தரங்கு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தலைமையில் நடைபெற்றது.

Update: 2024-03-11 15:25 GMT

விருதுநகர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி கலையரங்கில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகம் சார்பில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா முன்னிலையில், வன்கொடுமை விழிப்புணர்வு பயிற்சி, குழந்தை திருமணம், உயர்கல்வி மற்றும் இயற்கை வளம் பாதுகாத்தல் குறித்த கருத்தரங்கு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தலைமையில் நடைபெற்றது.

இக்கருத்தரங்கில் பஞ்சாயத்து ராஜ் சட்டங்கள், வன்கொடுமை தடுப்புச் சட்டங்கள் மற்றும் தண்டனைகள், வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் நலத்திட்டங்கள், தாட்கோ மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள், உயர்கல்வி, குழந்தை திருமணம் தடுப்பு, இயற்கை வளம் பாதுகாத்தல் உள்ளிட்டவை குறித்து பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் எடுத்துக்கூறினார்கள்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஜெயசீலன் பேசுகையில்: விருதுநகர் மாவட்டத்தில் கடந்த 11 மாதங்களில் சுமார் 200 குழந்தை திருமணங்கள் கண்டறியப்பட்டு, 120 குழந்தைத் திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக ராஜபாளையம், சிவகாசி, திருச்சுழி, நரிக்குடி ஒன்றியங்களில் அதிக அளவில் குழந்தை திருமணங்கள் நடக்கின்றன. கடந்த ஓராண்டில் 19 வயதுக்கு உட்பட்ட இளம்பெண்கள் கருத்தரிப்பு 300 முதல் 400 வரை உள்ளது. குழந்தை திருமணத்தை தடுப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, அதற்கான தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதையும் மீறி நமக்கு தெரியாமல் நடக்கும் குழந்தை திருமணத்தினால், 19 வயதுக்குட்பட்டு குழந்தைப்பேறு அடையும், தாய்மார்களின் இறப்பு விகிதம் அதிகரிக்கிறது.

மேலும், 19 வயதுக்கு உட்பட்ட பெண்கள் குழந்தை பெற்றுக்கொள்ளும்போது அக்குழந்தை எடை குறைவாக பிறக்கிறது. அதனால் வளர்ச்சி குறைகிறது. படிப்பில் கவனமின்மை ஏற்படுகிறது. இதனால் இடைநிற்றல் ஏற்படுகிறது. மேலும், பிறக்கும் குழந்தையின் எடை குறைவாகவும், ஊட்டச்சத்து குறைபாட்டோடும் இருக்கின்றது. இதனை சட்டப்பூர்வமாக தடுக்க வேண்டும். எதிர்கால சமுதாயத்தை காக்க வேண்டும். அதன்பின் அக்குழந்தை சமூகத்திற்கு எதிரான தீய பழங்கங்களுக்கு ஆளாகும் வாய்ப்பு உருவாகிறது. இதில் சிலர் சிக்கிக்கொள்கிறார்கள். சாதிய வேறுபாடுகள் தொடர்பான வன்கொடுமைகளை தடுப்பதற்கு தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சாதிய வேறுபாடுகள் தொடர்பான சட்ட பாதுகாப்பு என்னென்ன இருக்கிறது என தெரிந்து கொள்ள வேண்டும். தொடர்ந்து கண்காணித்து வர வேண்டும். இதை ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிவதன் மூலம் பிரச்சனையை வராமல் நாம் தடுக்க முடியும். பழங்குடியினர்களுக்கான பாதுகாப்புச் சட்டங்கள் என்னென்ன, அவர்கள் வாழ்க்கை தர மேம்பாட்டிற்கான அரசு திட்டங்கள் என்னென்ன என்பதை தெரிந்து கொண்டு, அவர்களின் வளர்ச்சிக்கு உதவியாக இருக்க வேண்டும். பொருளாதார வளர்ச்சியை அவர்களுக்கு ஏற்படுத்தும் வண்ணம் உரிய தகுதி வாய்ந்த பயனாளிகளுக்கு அரசின் பலன்களை எடுத்துச் செல்ல வேண்டும். மேலும், கல்வியில் மாணவர்களின் இடைநிற்றல்களை கண்டறிந்து அதை போக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

மாவட்டத்தில் சுமார் 2000 இடைநிற்றல் மாணவர்களை அரசு அலுவலர்கள் சந்தித்து, அவர்களுக்கான காரணங்களை கண்;டறிந்து அதனை பூர்த்தி செய்து அவர்களின் கல்வி தொடர்வதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். அந்தந்த பகுதி ஊராட்சித்தலைவர்கள், அரசு அலுவலர்கள் இதனை கண்டறிந்து, இடைநிற்றலை தடுப்பதற்கான நவடிக்கைகள் எடுக்க வேண்டும். கடந்த 1991 முதல் 2017 வரை விருதுநகர் மாவட்டத்தில் நீர் நிலைகளின் 33 சதவிகித பரப்பளவு குறைந்துள்ளது. ஆக்கிரமிப்புகளை அகற்றி நீர் நிலைகளை பாதுகாக்க வேண்டும்.

இயற்கை வளங்கள் மற்றும் நீர் வளங்களை பாதுகாப்பதில் ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்களின் பங்களிப்பு மிக முக்கியமானதாகும். நீர் நிலைகளை பாதுகாப்பதில் சட்டபூர்வமான கடமையும் பொறுப்புணர்வோடும் இருக்க வேண்டும். இது ஒரு தொடர்ச்சியான சங்கிலி செயல்பாடு. எனவே இந்த கருத்தரங்கில் வன்கொடுமை தடுப்பு, இடைநிற்றல் தடுப்பதன் மூலம் எதிர்கால சமுதாயத்தை பாதுகாப்பது, இயற்கை வளங்களை பாதுகாப்பது, குழந்தை திருமணத்தை தடுப்பது போன்றவற்றில் தாங்கள் பயிற்சி பெறுவதோடு மட்டுமல்லாமல், இதனை செயல்படுத்தி தங்கள் பகுதியில் உள்ள சமுதாயத்தை முன்னேற்றுவதற்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என தெரிவித்தார்.

Tags:    

Similar News