பழச்சாறு தொழிற்சாலை அமைக்க முயற்சி - எம்பி கதிர் ஆனந்த்
வேலூர் மாவட்டத்தில் பழச்சாறு தொழிற்சாலை அமைப்பதற்காக மத்திய அரசின் ஈடுபாட்டோடு முயற்சி மேற்கொள்ளப்படும் வேலூர் எம்பி கதிர் ஆனந்த் தெரிவித்தார்.
வேலூர் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுக் கூட்டம் குழுவின் தலைவர் வேலூர் பாராளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் தலைமையில் நடைபெற்றது .இதில் மாவட்ட ஆட்சித் தலைவர் சுப்புலெட்சுமி மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர் .
அப்போது பேசிய கதிர் ஆனந்த், வேலூர் மாவட்டத்தில் பழச்சாறு தொழிற்சாலை அமைப்பதற்காக மத்திய அரசின் ஈடுபாட்டோடு முயற்சி மேற்கொள்ளப்படும். மாவட்ட தொழில் மையம் மூலம் 8 வகுப்பு வரை படித்த இளைஞர்களுக்கு ரூபாய் 50 லட்சம் வரை மானியத்துடன் கடன் உதவி வழங்கும் திட்டம் குறித்து இளைஞர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். மாவட்ட தொழில் மையத்தின் சார்பில் சிறப்பு முகாம்களை நடத்தி இளைஞர்களை தொழில்புரிய ஊக்குவிக்க வேண்டும்.
மாவட்டத்தில் அங்கன்வாடி மையங்களில் தனியார் கட்டடங்களில் இயங்கும் அங்கன்வாடி மையங்களுக்கு அரசு கட்டடங்கள் கட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தமிழ்நாடு முதலமைச்சரின் சிறப்பு திட்டமான காலை உணவு திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டம் நூறு சதவீதம் முழுமையான வெற்றி அடைந்துள்ளது. இத்திட்டத்தை கொண்டு வந்த முதலமைச்சருக்கு குழுவின் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. என்று பேசினார்.