தஞ்சையில் நெல் அரவை தொழிலாளர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
தஞ்சாவூரில் செவ்வாய்க்கிழமை அரவை ஆலை முகவர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர.
தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை மாவட்ட அரவை முகவர்கள் மற்றும் தொழிலாளர்கள் சார்பில், (பிப்.20) செவ்வாய்க்கிழமை காலை 10 மணி அளவில் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் டெல்டா மாவட்டங்களில் கொள்முதல் செய்யும் நெல்லை, டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்ட அரவை முகவர்களின் ஆலைகளுக்கு தேவையான நெல்லை இருப்பு வைக்காமல், வெளி மாவட்டங்களுக்கு இயக்கம் செய்வதை கண்டித்து இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
டெல்டா மாவட்டங்களில் நெல் சாகுபடி தவிர்த்து, வேறு எந்த பெரிய தொழில்களும் கிடையாது. இங்கிருக்கும் ஒரே தொழிற்சாலை அரிசி அரவை தொழிற்சாலை மட்டுமே. இந்த தொழிற்சாலைகளை நம்பித்தான் டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் வாழ்க்கை நடத்தி வருகின்றனர்.
இதுநாள் வரை ஆண்டுக்கு 10 மாதங்களுக்கு அரவைக்கு நெல்லை இருப்பு வைத்து வழங்கிக் கொண்டிருந்த, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், இந்த ஆண்டு நெல்லை இருப்பு வைக்காமல் வெளி மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கிறது. இதனால் அரவைக்கு நெல் இல்லாமல் அரவை முகவர்களும் அரவை ஆலைத் தொழிலாளர்களும், அந்த தொழிலை நம்பி உள்ள லாரி உரிமையாளர்கள், ஓட்டுநர்கள், சுமை தூக்கும் தொழிலாளர்கள், டெல்டா மாவட்டங்களில் உள்ள குடோன்களில் பணியாற்றும் சுமைதூக்கும் தொழிலாளர்கள் ஆகிய ஆயிரக்கணக்கானவரின் வாழ்க்கை கேள்விக்குறியாகிவிடும். எனவே, டெல்டா மாவட்ட மக்களை பாதுகாக்க இருக்கின்ற ஒரே தொழிற்சாலையான அரவை தொழில் பாதிக்கப்படக்கூடாது என வலியுறுத்தி, தமிழக அரசு இப் பிரச்சினையில் உடனடியாக தலையிட்டு டெல்டா மாவட்டங்களில் உள்ள தொழிற்சாலைகளுக்கு மட்டுமே அரவைக்கு நெல் வழங்க வேண்டும் என வலியுறுத்தி,
தஞ்சை மாவட்ட அரவை முகவர்கள் சங்க தலைவர் ஏ.பக்கிரிசாமி தலைமையில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இதில் 90-க்கும் மேற்பட்ட அரவை ஆலை முகவர்கள், அவற்றில் பணியாற்றும் 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பங்கேற்க உள்ளனர்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.