குடிநீர் சிக்கனம் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு: ஆட்சியர் அறிவுறுத்தல்
கோடை காலத்தில் குடிநீர் சிக்கனம் குறித்து சேலம் மாவட்ட பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என அதிகாரிகளுக்கு கலெக்டர் பிருந்தாதேவி அறிவுறுத்தியுள்ளர்.
சேலம் மாவட்டத்தில் கோடை காலத்தில் பொதுமக்களுக்கு சீரான குடிநீர் வழங்குவதை உறுதி செய்யும் வகையில் அலுவலர்களுடனான வாராந்திர ஆய்வுக்கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.
கூட்டத்துக்கு கலெக்டர் பிருந்தாதேவி தலைமை தாங்கி பேசியதாவது:- கோடை காலத்தில் சீரான குடிநீர் வழங்கப்படுவதை உறுதி செய்யும் வகையில் அலுவலர்கள் தொடர் கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும். குறிப்பாக கோடை காலத்தில் குடிநீர் சிக்கனம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
மாவட்டத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் 11 கூட்டுக்குடிநீர் திட்டங்கள் மூலம் 4 நகராட்சிகள், 29 பேரூராட்சிகள் மற்றும் 4,466 ஊரக குடியிருப்புகளுக்கு தினமும் சராசரியாக 192.591 மில்லியன் லிட்டர் பாதுகாக்கப்பட்ட சீரான குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் 33 லட்சத்து 94 ஆயிரம் பேர் பயனடைந்து வருகின்றனர்.
மாநகர பகுதிகளில் 4 மண்டலங்களின் 60 வார்டுகளில் உள்ள 9 லட்சத்து 66 ஆயிரம் பேர் பயன்பெறும் வகையில் தனிக்குடிநீர் திட்டம் மற்றும் நங்கவள்ளி குடிநீர் திட்டம் ஆகிய காவிரி குடிநீர் திட்டங்கள் மூலம் தினமும் 130 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
மாவட்டத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் சார்பில் நடைபெற்று வரும் குடிநீர் திட்ட பணிகளின் முன்னேற்ற அறிக்கையை ஆய்வுக்கூட்டத்தில் அலுவலர்கள் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.