ரசாயன உரங்கள் பயன்பாட்டினை குறைத்தல் குறித்த விழிப்புணர்வு முகாம்
ரசாயன உரங்கள் பயன்பாட்டினை குறைத்தல் குறித்த விழிப்புணர்வு முகாம்
Update: 2024-06-14 06:49 GMT
தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவாசத்திரம் வட்டாரத்தில், மணக்காடு கிராமத்தில் அட்மா திட்டத்தின் கீழ் சமச்சீர் உரமிடல் - ரசாயண உரங்கள் பயன்பாட்டினை குறைத்தல் குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. சேதுபாவாசத்திர வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் ஜி.சாந்தி வரவேற்றுப் பேசினார். பயிற்சியில் ரசாயன உரங்களை சரியான முறையில் பயன்படுத்துதல் பற்றிய விளக்கங்களை பட்டுக்கோட்டை தென்னை ஆராய்ச்சி நிலையத்தின் இணைப் பேராசிரியர் இரா.ஆனந்த் தொழில்நுட்ப உரைகள் வழங்கினார். தஞ்சாவூர் மாவட்ட வேளாண்மை துணை இயக்குநர் (உழவர் பயிற்சி நிலையம்) ஐயம்பெருமாள் தலைமை வகித்துப் பேசுகையில், "நடப்பாண்டில் செயல்படுத்தகூடிய திட்டங்கள் ரசாயன உரங்களை தவிர்த்து, இயற்கை முறையில் சாகுபடி செய்வதால் மண்ணின் வளமும் காத்து சத்தான உணவுப்பொருள்கள் கிடைக்கிறது. விவசாயிகள் ரசாயன உரங்களை பயன்படுத்துவதற்கு முன்பு பயிருக்கு தேவையான உர விகிதத்தினை அறிந்து பயன்படுத்த வேண்டும்" என்று கேட்டுக்கொண்டார். தஞ்சாவூர் மாவட்ட வேளாண்மை துணை இயக்குநர் (மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்) ஜெயசீலன் கலந்து கொண்டு முன்னிலை வகித்துப் பேசுகையில்," பிரதம மந்திரியின் கௌரவ நிதி உதவி பெறுவதற்கான வழிமுறைகள் தேவைப்படும் ஆவணங்கள் பற்றி எடுத்துரைத்து விவசாயிகள் பயன்பெறுமாறு" கேட்டுக் கொண்டார். இயற்கை வேளாண்மை சம்மந்தமான இடுப்பொருட்கள் விவசாயிகளின் பார்வைக்கு வேளாண் கண்காட்சியாக வைக்கப்பட்டு விவசாயிகள் பார்த்து பயனடைந்தனர். நிறைவாக வேளாண்மை துணை அலுவலர் து.சிவசுப்ரமணியன் நன்றி கூறினார். இப்பயிற்சிக்கான ஏற்பாடுகளை அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர் மோ.சுரேஷ், உதவி தொழில்நுட்ப மேலாளர் ஆ.தமிழழகன், சி.ஜெயக்குமார், உதவி வேளாண்மை அலுவலர் ஆ.நிவாசன் ஆகியோர் சிறப்பாக செய்து இருந்தனர். இப்பயிற்சியில் நாற்பதுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.