அருப்புக்கோட்டையில் தெருநாய்களை கட்டுப்படுத்த விழிப்புணர்வு கூட்டம்

அருப்புக்கோட்டை நகராட்சி அலுவலகத்தில் இறைச்சிக்கடை உரிமையாளர்கள் உடன் தெரு நாய்களை கட்டுப்படுத்துவது தொடர்பான விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

Update: 2024-02-02 15:32 GMT
ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் 

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை நகர் பகுதியில் தெரு நாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. தெரு நாய்களால் கடிபடுபவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

அதிகரிக்கும் தெரு நாய்களை கட்டுப்படுத்த நகராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் நகர மன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் அனைத்து நகர்மன்ற உறுப்பினர்களும் தெருநாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினர்.

அதன் ஒரு பகுதியாக அருப்புக்கோட்டை நகராட்சி அலுவலகத்தில் இறைச்சி கடை உரிமையாளர்கள் உடனான விழிப்புணர்வு கூட்டம் நகர் மன்ற தலைவர் சுந்தரலட்சுமி சிவப்பிரகாசம் தலைமையில் துணைத் தலைவர் பழனிச்சாமி, ஆணையாளர் அசோக்குமார் முன்னிலையில் நடைபெற்றது.

இதில் கால்நடை மருத்துவத்துறை உதவி இயக்குனர் மருத்துவர் ரமேஷ் கலந்து கொண்டு கோழி இறைச்சி கடை மற்றும் ஆட்டு இறைச்சி கடையில் வீணாகும் கோழி கால்கள் மற்றும் கொழுப்புகளை கடை முன் நின்று கொண்டிருக்கும் தெரு நாய்களுக்கு வீசுவதால் நாய்களுக்கு புரோட்டின் சத்து அதிகமாகி அது அதிக அளவில் இனப்பெருக்கம் செய்ய உதவுகிறது. தெரு நாய்களுக்கு இறைச்சிக் கழிவுகளை வீசுவதை நிறுத்த வேண்டும் என கூறினார்.

மேலும் நகர் காவல் ஆய்வாளர் பாலமுருகன் பேசும்போது இறைச்சி கடை உரிமையாளர்கள் தங்களிடம் பணி புரியும் ஊழியர்களை இறைச்சி கழிவுகளை நாய்களுக்கு வீசுவதை நிறுத்தச் சொல்ல வேண்டும், மேலும் இறைச்சிக் கழிவுகளை நாய்களுக்கு வீசுவதை நிறுத்தவில்லை என்றால் நகராட்சி நிர்வாகம் புகார் அளிக்கும் பட்சத்தில் இறைச்சி கடை உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.

இறைச்சிக் கழிவுகள் அனைத்தையும் தூய்மை பணியாளரிடம் வழங்க வேண்டும் எதையும் வீதியில் கொட்டக்கூடாது என சுகாதார அலுவலர்கள் இறைச்சி கடை உரிமையாளர்களுக்கு எடுத்துக் கூறினர்.

இந்த விழிப்புணர்வு கூட்டத்தில் அருப்புக்கோட்டை நகர் பகுதியில் உள்ள இறைச்சி கடை உரிமையாளர்கள், நகர் மன்ற உறுப்பினர்கள், சுகாதாரத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News