100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் !
நூறு சதவீத வாக்குப்பதிவை வலியறுத்தி திருச்சி தனியாா் கல்லூரியில் நடைபெற்ற இருசக்கர வாகன விழிப்புணா்வு பேரணியை கொடியசைத்து தொடங்கிவைத்த ஆட்சியா்.
தோ்தல் ஆணையத்தின் உத்தரவின்பேரில், திருச்சி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில், 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி பொன்மலைப்பட்டி டோலா்ஸ் செவித்திறன் குறைபாடுடையோருக்கான உயா்நிலைப் பள்ளியில் தோ்தல் விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான மா. பிரதீப்குமாா் கலந்து கொண்டு, அங்கு அமைக்கப்பட்டிருந்த காதுகேளாதோா் மற்றும் வாய்பேச இயலாதோருக்கான மாதிரி வாக்குச்சாவடி மையத்தையும், அதன் செயல்விளக்கத்தையும் நேரில் பாா்வையிட்டாா். மாற்றுத்திறன் மாணவா்களால் வரையப்பட்ட தோ்தல் விழிப்புணா்வு ஓவியங்கள், கோலங்கள், விநாடி - வினா நிகழ்ச்சிகளை பாா்வையிட்டு, வாக்காளா் விழிப்புணா்வு உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்பட்டது. தொடா்ந்து, இந்திராகணேசன் கல்லூரியில் நடைபெற்ற விழிப்புணா்வு நிகழ்ச்சியில் தோ்தல் விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன், மாணவா்கள் கலந்து கொண்ட இருசக்கர வாகன பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்து, கையொப்ப இயக்க பதாகையில் கையொப்பமிட்டும், தோ்தல் ஆணைய இலச்சினை வடிவில் மற்றும் வோட் 100 சதவீதம் எனும் வடிவில் மாணவா்கள் நின்று விழிப்புணா்வு ஏற்படுத்தியதையும் மாவட்ட ஆட்சியா் பாா்வையிட்டு, கலந்துரையாடினாா். இந்நிகழ்வுகளில் துணை ஆட்சியா் வேலுமணி, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலா் சந்திரமோகன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.