பாலசுப்பிரமணியர் கோவில் கும்பாபிஷேக விழா
பாலசுப்பிரமணியர் கோவில் கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
By : King 24x7 Website
Update: 2023-10-28 06:37 GMT
திருக்கோவிலூர் ஆஸ்பத்திரி ரோட்டில் உள்ள பிரசித்தி பெற்ற வள்ளி, தெய்வானை சமேத பாலசுப்பிரமணியர் கோவில் கும்பாபிஷேக விழா கடந்த 25-ந்தேதி விக்னேஸ்வரர் பூஜையுடன் தொடங்கியது. தொடர்ந்து பிரவேச பலி, வாஸ்து சாந்தி, அங்குரார்ப்பணம், கும்பஅலங்காரம் மற்றும் முதல் கால யாக சாலை பூஜையும்,நேற்று முன்தினம் காலை இரண்டாம் காலயாகபூஜை, யாக வேள்வி மற்றும் 3-ம் கால யாக சாலை பூஜை நடைபெற்றது. கும்பாபிஷேக நாளான நேற்று அதிகாலை 5.30 மணி முதல் காலை 8.40 மணி வரை யாக சாலை பூஜைகள் நடைபெற்று, கடம் புறப்பாடு நடந்தது.இதையடுத்து ஸ்தூபி விமான கலசம் மீது புனிதநீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் செய்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. விழாவில் திருக்கோவிலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவின்போது பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அதன்பிறகு மாலை 6 மணிக்கு திருக்கல்யாண உற்சவமும், இரவு 8 மணிக்கு சாமி வீதி உலாவும் நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், விழா குழுவினர்கள், உபயதாரர்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் முருக பக்தர்களும் செய்திருந்தனர். திருக்கோவிலூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.