வங்கி ஏ.டி.எம்.சேவை குறைபாடு: பெண்ணுக்கு ரூ.33 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும்

சேலத்தில் வங்கி ஏ.டி.எம்.சேவை குறைபாட்டால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.33 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என நுகர்வோர் நீதிமன்றம் தீர்பளித்துள்ளது.

Update: 2024-05-03 01:57 GMT

வங்கி ஏ.டி.எம்.சேவை குறைபாட்டால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.33 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும்

சேலம் மாவட்டம் , ஜலகண்டாபுரத்தை சேர்ந்தவர் பாலமுருகன். இவர் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 6-ந் தேதி நங்கவள்ளி சாலையில் உள்ள ஒரு வங்கியின் ஏ.டி.எம். எந்திரத்தில் தனது மனைவி ஷோபனாவின் மற்றொரு வங்கி கணக்குக்கு உரிய ஏ.டி.எம். கார்டு மூலம் 2 முறை தலா ரூ.10 ஆயிரம் எடுக்க முயன்றார். ஆனால் எந்திரத்தில் பணம் வராமல் அவரது வங்கி கணக்கில் பற்று காண்பிக்கப்பட்டது. இதுபற்றி அவர் தனது மனைவியின் வங்கி கணக்கு உள்ள கிளைக்கு சென்று புகார் தெரிவித்தார்.

அதன்பேரில் வங்கி மேலாளர் தரப்பில் ஏ.டி.எம். எந்திரம் வைத்திருந்த வங்கி கிளைக்கு கடிதம் எழுதப்பட்டது. ஆனால் உரிய முறையில் பதில் அளிக்காமல் சேமிப்பு கணக்கில் பணம் வரவு வைக்கவில்லை. இதுகுறித்து பாதிக்கப்பட்ட ஷோபனா 2 வங்கி கிளை மேலாளர்கள் மீது தமிழ்நாடு நுகர்வோர் மற்றும் மக்கள் உரிமைகள் புலனாய்வு கமிட்டி தலைவர் வக்கீல் எஸ்.செல்வம் மூலம் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய நீதிபதி கணேஷ்ராம், உறுப்பினர் ரவி ஆகியோர், ஏ.டி.எம். மையம் வைத்திருந்த வங்கியானது, ஷோபனாவின் சேமிப்பு பணம் ரூ.20 ஆயிரத்தை திருப்பி வழங்க வேண்டும். மேலும், சேவை குறைபாட்டிற்கு நஷ்டஈடாக ரூ.5 ஆயிரம், மன உளைச்சலுக்கு ரூ.5 ஆயிரம், வழக்கு செலவு தொகை ரூ.3 ஆயிரம் என மொத்தம் ரூ.33 ஆயிரத்தை 2 மாதங்களுக்குள் இழப்பீடாக வழங்க வேண்டும் என தீர்ப்பில் கூறி உள்ளனர்.

Tags:    

Similar News