மார்த்தாண்டத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பறிமுதல்
மார்த்தாண்டத்தில் சுகாதார ஆய்வாளர் சோதனையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பறிமுதல் செய்யப்பட்டு ரூ. 44,000 அபராதம் விதிக்கப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை நகராட்சி அலுவலகத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற கவுன்சில் கூட்டத்தின் போது பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. குறிப்பாக பொதுமக்கள் வீடுகளில் உள்ள குப்பைகளை தரம் பிரித்து வழங்க வேண்டும் எனவும் கடைகள்,வணிக வளாகங்கள்,குடியிருப்பு ஆகியவற்றில் இருந்து வெளியேறும் கழிவுநீரை மழை நீர் வடிகாலில் விடக்கூடாது,பிளாஸ்டிக் பொருட்களை சாலைகளில் வீசக்கூடாது மற்றும் கடைகளில் பிளாஸ்டிக் விற்பனை செய்யக்கூடாது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதன் அடிப்படையில் ஆய்வு நடத்தவும் உத்தரவு இடப்பட்டது.இந்த நிலையில் குழித்துறை நகராட்சி ஆணையர் ராமதிலகம் உத்தரவின் பேரில் சுகாதார ஆய்வாளர் ராஜேஷ் தலைமையில் அதிகாரிகள் மார்த்தாண்டத்தில் கடைகளில் நடத்திய சோதனையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அத்துடன் கடைகளுக்கு ரூபாய் 44 ஆயிரம் அபராதமும் விதித்தனர்.தொடர்ந்து கடைகளில் பிளாஸ்டிக் விற்பனை செய்தால் சீல் வைத்து நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்