வண்டுகள் அச்சுறுத்தல்: எப்சிஐ குடோனில் அதிகாரிகள் ஆய்வு !

தூத்துக்குடியில் வண்டுகள் அச்சுறுத்தல் எதிரொலியாக எப்சிஐ குடோனில் மாநகராட்சி சுகாதார அதிகாரிகள் குழுவினர் திடீர் ஆய்வு நடத்தினர்.;

Update: 2024-07-11 09:58 GMT

எப்சிஐ குடோனில் அதிகாரிகள் ஆய்வு 

தூத்துக்குடி 3-ம் மைல் பகுதியில் இந்திய உணவுக் கழகத்துக்கு சொந்தமான குடோன் அமைந்து உள்ளது. இங்கு அரிசி, கோதுமை உள்ளிட்ட உணவு தானியங்கள் சேமித்து வைக்கப்பட்டு பல்வேறு பகுதிகளுக்கு லாரிகள் மூலம் அனுப்பப்படுகிறது.

கடந்த சில வாரங்களாக இந்த குடோனில் இருந்து அதிக அளவில் வண்டுகள் வெளியேறி அருகில் உள்ள வீடுகளுக்குள் புகுந்த விடுவதால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருவதாக மக்கள் புகார் தெரிவித்தனர். இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு கொடுத்து உள்ளனர்.

Advertisement

இந்த நிலையில், இந்திய உணவுக் கழக குடோனில் ஆய்வு செய்து வண்டுகள் பிரச்சினைக்கு தீர்வு காண உரிய நடவடிக்கை எடுக்குமாறு மாநகராட்சி ஆணையருக்கு மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி அறிவுறுத்தினார்.

இதனை தொடர்ந்து மாநகராட்சி ஆணையாளர் மதுபாலன் உத்தரவின்படி நகர்நல அலுவலர் (பொறுப்பு) தினேஷ் தலைமையில், மேற்கு மண்டல சுகாதார அலுவலர் ஸ்டாலின் பாக்கியநாதன் உள்ளிட்ட சுகாதாரத் குழுவினர் நேற்று இந்திய உணவுக் கழக குடோனில் ஆய்வு நடத்தினர். இதே போன்று சென்னை இந்திய உணவு கழகத்தின் தரக்கட்டுப்பாடு பிரிவு துணை பொதுமேலாளர் ரவிசாஸ்திரி தலைமையிலான தரக்கட்டுப்பாடு குழுவினரும் நேற்று குடோனில் ஆய்வு மேற்கொண்டனர்.

குடோனில் முறையாக மருந்து தெளிக்கப்பட்டுள்ளதா, கெட்டுபோன உணவு தானியங்கள் சேமித்து வைக்கப்பட்டுள்ளதா, வண்டுகள் மற்றும் பூச்சிகள் எவ்வாறு உருவாகின்றன, அவைகளின் தாக்கம் எந்தளவுக்கு உள்ளது என்பன போன்றவை குறித்து அவர்கள் விரிவாக ஆய்வு செய்தனர்.

அப்போது இந்திய உணவுக் கழக அதிகாரிகள் உரிய விளக்கங்களை அளித்தனர். மேலும், இது தொடர்பாக இந்திய உணவுக் கழகம் விரிவான அறிக்கை அளிக்குமாறு ஆய்வுக் குழு சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது. இந்த அறிக்கை அடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News