பைக் மீது வாகனம் மோதல் : இளைஞர் உயிரிழப்பு
காவல் நிலையம்
கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வேட்டமங்கலம், புது காலனி அருகே உள்ள குந்தாணிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் மாரிமுத்து மகன் பழனிச்சாமி. இவர் நவம்பர் 12ஆம் தேதி மாலை 6:30 மணி அளவில் அவருக்கு சொந்தமான டூவீலரில் கரூர்- ஈரோடு சாலையில் சென்று கொண்டு இருந்தார்.
இவரது வாகனம் நொய்யல் குறுக்கு சாலை பகுதியிலுள்ள சாரதி பெட்ரோல் பங்க் அருகே சென்றபோது, அதே சாலையில் வேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் பழனிச்சாமி ஓட்டிச் சென்ற டூவீலர் மீது மோதி விட்டு, நிற்காமல் மின்னல் வேகத்தில் சென்று விட்டது.இந்த விபத்தில் வாகனத்துடன் கீழே விழுந்த பழனிச்சாமிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்தில் உயிர் இழந்தார்.
இந்த சம்பவம் அறிந்த பழனிச்சாமியின் தந்தை மாரிமுத்து, இதுகுறித்து வேலாயுதம்பாளையம் காவல்துறையினருக்கு அளித்த தகவல் பேரில், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர், உயிரிழந்த பழனிச்சாமியின் உடலை உடற்கூறு ஆய்வுக்காக ஈரோடு மாவட்டம், கொடுமுடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து, மோதிவிட்டு நிற்காமல் சென்ற வாகனம் எது? அதன் ஓட்டுனர் யார்? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் வேலாயுதம்பாளையம் காவல்துறையினர்.