பின்னலாடை துறை வீழ்ச்சிக்கு பாஜக அரசே காரணம் - மேயர் தினேஷ்குமார்

பின்னலாடை துறை வீழ்ச்சிக்கு பாஜக அரசே காரணம் , 10 ஆண்டு காலமாக எதுவும் செய்யாத பாஜக இனியும் செய்யப் போவதில்லை. இந்தியா கூட்டணி வெற்றி பெற்றதும் நிச்சயம் பின்னாலாடை தொழில் மீண்டும் பழைய வளர்ச்சியை அடையும் என மேயர் தினேஷ்குமார் தெரிவித்தார்.

Update: 2024-04-08 04:18 GMT

ருப்பூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதியில் திருப்பூர் மாநகராட்சி மேயரும் திருப்பூர் வடக்கு மாநகர திமுக செயலாளருமான தினேஷ்குமார்  தீவிர பரப்புரையில் ஈடுபட்டார். திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 379 பூத்துக்களிலும் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடக்கூடிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சுப்பராயனுக்கு ஆதரித்து பரப்புரையில் ஈடுபட்ட அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர் செல்லும் இடமெல்லாம் பொது மக்களை சந்திக்கும் போது தமிழகத்தில் உள்ள திராவிட ஆட்சி போல மத்தியிலும் திராவிட ஆட்சி மலர வேண்டும் என மக்கள் விருப்பப்படுவதாகவும் , ஒவ்வொரு இல்லங்களிலும் திராவிட ஆட்சியில் ஏதேனும் ஒரு திட்டத்தால் பயன்படக்கூடிய வகையில் அவர்கள் தற்போது திராவிட மாடல் ஆட்சிக்கு முழு ஆதரவு தர தயாராகி வருவதாகவும் தெரிவித்தார். கடந்த காலங்களில் திருப்பூர் வடக்கு தொகுதியில் திமுக தோல்வியை தழுவி இருந்தாலும் கூட தற்போது நடைபெறும் ஆட்சியின் சாதனைகள் காரணமாக திருப்பூர் வடக்கு தொகுதியும் திமுகவின் ஆதரவு தொகுதியாக மாறும் எனவும் , இன்று ஒரே நாளில் 379 பூத்துகளில் 2 லட்சம் வாக்காளர்களை சந்தித்து வாக்கு கேட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

தொடர்ந்து கடந்த 10 ஆண்டுகளாக திருப்பூரில் பின்னலாடை தொழில் வீழ்ச்சிக்கு மத்திய பாஜக அரசே காரணம் எனவும் பாலிஸ்டர் துணி வகைகளை இறக்குமதி செய்ததோடு மட்டுமல்லாது , நூல் விலையை கட்டுப்படுத்த பஞ்சு மற்றும் நூல் ஏற்றுமதியை தடை விதிக்க வேண்டும் என திருப்பூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பராயன் உள்ளிட்ட இந்தியா கூட்டணியில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்தும் அதனை மத்திய அரசு செவி கொடுக்காமல் இருந்ததே பின்னலாடை துறை வீழ்ச்சிக்கு காரணம் எனவும் ,  தற்போது மோடியின் நேரடி வேட்பாளர் எனவும் பின்னலாடை பிரச்சனைக்கு தீர்வு காண்போம் என கூறி வருவது தேர்தலுக்கானதே எனவும் 10 ஆண்டு காலமாக எதுவும் செய்யாத பாஜக இனியும் செய்யப் போவதில்லை எனவும் நிச்சயம் இந்தியா கூட்டணி வெற்றி பெற்று பின்னாலாடை தொழில் மீண்டும் பழைய வளர்ச்சியை அடையும் என கூறினார்.

Tags:    

Similar News