தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற பாஜகவினர் கைது
திருப்பூரில் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற பாஜக வினர் 100 க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து 55 பேர் இறந்துள்ளனர். மேலும் நூற்றுக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர் இந்நிலையில் கள்ளக்குறிச்சியில் 55 பேர் இறந்ததற்கு தமிழக அரசுதான் பொறுப்பேற்க வேண்டும் என வலியுறுத்தி மாநிலம் முழுவதும் தமிழக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்திருந்தார்.
அதன்படி நேற்று திருப்பூர் குமரன் சிலை முன்பு நூற்றுக்கும் மேற்பட்ட பாஜகவினர் வருகை தந்தனர். இதனை அடுத்து நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். பாஜகவினரிடம் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கிடையாது என காவல்துறையினர் எச்சரித்தனர். இதனிடையே காவல்துறையினரின் தடையையும் மீறி பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு கோஷங்கள் எழுப்பினர். தொடர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தடையை மீறி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்து அழைத்த ஒரு பாஜகவினர் போலீசார் அராஜகம் ஒழிக என்றும் கடும் சொற்கள் பேசியும் போலீசாருக்கு மிரட்டல் விடுத்தனர். தொடர்ந்து போலீசார் அவர்களை கைது செய்ய முற்பட்டபோது, பாஜக வடக்கு மாவட்ட தலைவர் செந்தில் வேல் யார் மீது கை வைக்கிறீர்கள் சட்டையை கழட்டி வைத்துவிட்டு வா யார் என்று காட்டுகிறேன் என்று கொக்கரித்தார். இதனால் அங்கே சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. இதைத்தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்திற்கு அழைத்துச் சென்றனர்.