தென்திருப்பேரையில் பா.ஜ.க.வினர் டாஸ்மாக்கை முற்றுகையிட்டு போராட்டம்
தென்திருப்பேரையில் டாஸ்மாக் மதுபான கடையை மூடக்கோரி பா.ஜனதாவினர் அந்த கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
தூத்துக்குடி மாவட்டம், தென்திருப்பேரையில் நவத்திருப்பதி கோவில்களில் 7-வது ஸ்தலமான மகர நெடுங்குழைகாதர் கோவில், ஆழ்வார்திருநகரி யூனியன் அலுவலகம், பஸ் நிறுத்தம் ஆகியவற்றின் அருகில் டாஸ்மாக் மதுபான கடை செயல்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள், கோவிலுக்கு வரும் பக்தர்கள், சுற்றுலா பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்த டாஸ்மாக் மதுபான கடையை மூட வேண்டும் என வலியுறுத்தி பல்வேறு தரப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
குறிப்பாக, தூத்துக்குடி தெற்கு மாவட்ட பா.ஜனதா கட்சியினர் தொடர்ந்து இக்கடையை மூட வலியுறுத்தி கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்தனர். இதை தொடர்ந்து திருச்செந்தூர் உதவி கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற சமாதான கூட்டத்தில் 40 நாட்களில் உரிய முடிவெடுக்கப்படும் என உறுதி அளித்ததின் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது.
ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் நேற்று தெற்கு மாவட்ட தலைவர் சித்ராங்கதன் தலைமையில் தென்திருப்பேரை டாஸ்மாக் கடையை பா.ஜனதாவினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. ஏராளமானபோலீசார் அப்பகுதியில் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த ஏரல் தாசில்தார் கோபால் அந்த இடத்துக்கு சென்று, போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது வருகிற 16-ந் தேதி (வெள்ளிக்கிழமை) தாலுகா அலுவலகத்தில் சமாதான பேச்சுவார்த்தை நடத்தப்படும். அதுவரை டாஸ்மாக் மதுபான கடை செயல்படாது என்றும், போராட்டத்தை கைவிடுமாறும் அவர் கேட்டுக் கொண்டார். இதனை ஏற்றுக் கொண்ட பா.ஜனதாவினர் போராட்டத்தை தற்காலிகமாக கைவிடுவதாகவும், அந்த கடையை உடனடியாக மூடாவிட்டால் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் எனவும் தெரிவித்துள்ளனர்.