இவிஎம் மிஷினை நம்பி தேர்தலை சந்திக்கும் பாஜக - மரிய ஜெனிபர்
பாரதிய ஜனதா கட்சி மக்களை நம்பி தேர்தலை சந்திக்காமல் ஈவிஎம் மிஷினை நம்பி தேர்தலை சந்திப்பதாக நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மரிய ஜெனிபர் தெரிவித்தார்.
கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் மரிய ஜெனிபர் நேற்று கன்னியாகுமரியில் செய்தியாளரிடம் கூறியதாவது:- இந்தியாவில் 120 கோடி மக்களில் 80 கோடி மக்கள் ஏழைகள் என்றால் இந்த நாடு பெற்றிருக்கும் வளர்ச்சியை பாருங்கள். தாமரை, கை சின்னம், இரட்டை இலை, உதயசூரியனுக்கு வாக்கு போட்டு என்ன மாற்றத்தை கண்டீர்கள் ? ஒரே ஒருமுறை எங்களை நம்பி மைக் சின்னத்திற்கு வாக்கு செலுத்தி பாருங்கள்.
மாற்றம் என்பது சொல் அல்ல அது செயல் அப்படிப்பட்ட மாற்றத்தை நாங்கள் கொண்டு வருவோம். ராணுவத்தில் நூறு விழுக்காடு அந்நிய முதலீடு. ராணுவ ரகசியம் இப்போது இருக்கிறதா? ரபேல் பிரான்சில் வாங்கியது. பீரங்கி இஸ்ரேலில் வாங்கியது. துப்பாக்கி ரஷ்யாவில் வாங்கியது. எல்லா நாடுகளிலிருந்து ஆயுதத்தை வாங்கி என் நாட்டு மக்களை எப்படி காப்பாற்றுவது?
தனியார் முதலாளிகளிடம் இராணுவத்தை கொடுத்தால் எப்படி அது நாட்டுக்கான ராணுவமாக இருக்கும். மக்கள் சிந்திக்க வேண்டும். இந்தியாவில் இத்தனை ஆண்டுகளில் ஒரு முறையாவது ஒரு தமிழன் பிரதமராக வர விடுவதில்லை. நாமெல்லாம் அவர்களுக்கு இரண்டாம் தர குடிமக்கள். தமிழ்நாட்டின் வளர்ச்சியை பற்றி யோசிக்க நேரமில்லாத பாரதிய ஜனதா தற்போது மதத்தை வைத்து வாக்கு கேட்கின்றனர். மக்களை நம்பி தேர்தல் களத்தில் பாரதிய ஜனதா இல்லை. ஈவிஎம் மிஷினை நம்பி தேர்தலை சந்திக்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.