விபத்தில் மூளைச்சாவு அடைந்த ஊழியர் உடல் உறுப்புகள் தானம்!
ஆறுமுகநேரி அருகே ஆட்டோவில் இருந்து தவறி விழுந்ததில் மூளைச்சாவு அடைந்த டாஸ்மாக் ஊழியரின் உடல் உறுப்புகளை குடும்பத்தினர் தானமாக வழங்கினர்.
தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் ரத்தினபுரியைச் சேர்ந்தவர் மகாராஜன் (49). இவர் தூத்துக்குடி திரேஸ்புரம் டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக வேலை செய்து வந்தார். இவர் கடந்த 30-ந்தேதி தனது குடும்பத்தினருடன் இருக்கன்குடி கோவிலுக்கு ஆட்டோவில் சென்றார். பின்னர் அவர்கள் மறுநாள் அங்கிருந்து ஆறுமுகநேரிக்கு ஆட்டோவில் திரும்பி வந்து கொண்டிருந்தனர்.
ஆறுமுகநேரி கடலோர சோதனைச் சாவடி அருகில் சென்றபோது, ஆட்டோவில் இருந்து மகாராஜன் எதிர்பாராத விதமாக தவறி சாலையில் விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த அவருக்கு காயல்பட்டினம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்து, மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
ஆனாலும் அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படாமல், நேற்று அதிகாலையில் மூளைச்சாவு அடைந்தார். இதுகுறித்து டாக்டர்கள், மகாராஜனின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் உடல் உறுப்புகளை தானம் செய்வது குறித்தும் பேசினார்கள். இதையடுத்து குடும்பத்தினர், மகாராஜனின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்தனர். உடனடியாக நெல்லை அரசு மருத்துவமனையில் மகாராஜனுக்கு அறுவை சிகிச்சை செய்து, அவரது கல்லீரல், கண் கருவிழிகள், தோல் பகுதி ஆகியவை சேகரிக்கப்பட்டது.
அவற்றை திருச்சி, மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனைகளுக்கு கொண்டு சென்று, அங்குள்ள நோயாளிகளுக்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மூலம் பொருத்தினர். கண் கருவிழிகள் நெல்லை அரசு மருத்துவமனையில் உள்ள நோயாளிக்கு பொருத்தப்பட்டது. இதையடுத்து நெல்லை அரசு மருத்துவ கல்லூரி டீன் ரேவதி பாலன் மற்றும் டாக்டர்கள், மகாராஜன் உடலுக்கு அரசு மரியாதை செலுத்தினர்.