எம்.எல்.ஏ நிதியில் கட்டிய கட்டடங்கள்: திறப்பு விழாவுக்கு காத்திருப்பு
எம்.எல்.ஏ நிதியில் கட்டிய கட்டடங்கள்திறப்பு விழாவுக்கு இரண்டு ஆண்டுகளாக காத்திருக்கிறது.
காஞ்சிபுரத்தில் -எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ், லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட, ரேஷன் கடைகள், உடற்பயிற்சி கூடம் என, மூன்று அரசு கட்டடங்கள், திறப்பு விழாவுக்காக, 2 ஆண்டுகளாக காத்திருக்கின்றன.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்படும் அரசு அலுவலகங்கள், ரேஷன் கடைகள், நுாலகங்கள், அரசு குடியிருப்புகள் போதிய இடமின்றியும், வாடகை கட்டடங்களிலும் செயல்படுகின்றன. சொந்த கட்டடங்கள்கூட கிடைக்காமல் செயல்படும் அரசு அலுவலகங்கள் மத்தியில், அரசு நிதியில் கட்டப்பட்ட பல கட்டடங்கள், காஞ்சிபுரம் மாவட்டத்தில் இரண்டு ஆண்டுகளாக திறக்கப்படாமலேயே உள்ளன.
காஞ்சிபுரம் தி.மு.க.,- - எம்.எல்.ஏ., எழிலரசன் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் கட்டப்பட்ட அரசு கட்டடங்கள் சில ஆண்டுக்கணக்கிலும், மாத கணக்கிலும் திறக்கப்படாமலேயே இருப்பதால், அந்த கட்டடங்கள் பயன்பாட்டிற்கு வராமலேயே வீணாவதாக புகார் எழுந்து உள்ளது. காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் பகுதியில் உள்ள மாநகராட்சி பூங்காவிற்குள், எம்.எல்.ஏ., தொகுதி நிதியில், 2020- - 21 நிதியாண்டில், 25 லட்சம் ரூபாய் மதிப்பில், உடற்பயிற்சி கூடம் இரு ஆண்டுக்கு முன்பாக கட்டி முடிக்கப்பட்டது. இரு ஆண்டுகளாகியும் உடற்பயிற்சி கூடம் இன்னும் திறக்கப்படவில்லை. புத்தேரி ஊராட்சியில், பெரிய மேட்டுத் தெருவில் இயங்கும் ரேஷன் கடைக்கு, கூடுதல் ரேஷன் கடை தேவைப்பட்டதால், இரண்டாக பிரித்து, புத்தேரியில், புதிய ரேஷன் கடை, தி.மு.க.,- - எம்.எல்.ஏ., எழிலரசன் தொகுதி நிதியில், 15 லட்சம் ரூபாயில், கட்டப்பட்டது. இந்த கட்டடம் கட்டியும் ஓராண்டு ஆன நிலையில், இன்னும் திறக்கப்படவில்லை.