சேலம் அருகே பட்டப்பகலில் துணிகரம்

வீட்டின் பூட்டை உடைத்து திருட முயன்றவரை பிடித்து பொதுமக்கள் அடித்து உதைத்தனர்.

Update: 2024-06-28 15:33 GMT

கோப்பு படம்

சேலத்தை அடுத்த மல்லூர் அய்யனாரப்பன் கோயில் பகுதியை சேர்ந்தவர் செந்தில் (41), கூலித்தொழிலாளி. இவர் நேற்று காலை 11 மணிக்கு தனது வீட்டை பூட்டிவிட்டு அருகில் உள்ள ரேஷன்கடைக்கு பொருட்கள் வாங்கச் சென்றார். அங்கு அரிசி, சர்க்கரை உள்ளிட்ட பொருட்களை வாங்கிக் கொண்டு வீட்டிற்கு திரும்பி வந்தபோது, வீட்டின் கதவு திறந்து கிடந்துள்ளது.

அதனை பார்த்து அதிர்ச்சியடைந்த செந்தில், உள்ளே சென்றுள்ளார். அப்போது வீட்டிற்குள் பொருட்களை உருட்டிக் கொண்டிருந்த 2 பேர் வெளியே ஓடினர். உடனே அவர்களை பிடிக்க செந்தில் துரத்தினார். திருடன்,திருடன் என கூச்சலிட்டு சென்ற நிலையில், அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் வந்து ஒருவரை மடக்கி பிடித்தனர். மற்றொருவர் தப்பியோடிவிட்டார். சிக்கிய நபருக்கு பொதுமக்கள் தர்மஅடி கொடுத்தனர். பின்னர், மல்லூர் போலீசாருக்கு தகவல் கொடுத்த நிலையில், எஸ்ஐ முருகேசன் தலைமையிலான போலீசார் வந்து, அந்த நபரை மீட்டு விசாரித்தனர். அதில் அவர், மல்லூர் அம்பேத்கர்நகரை சேர்ந்த ராஜா மகன் சஞ்சய் (21) எனத்தெரியவந்தது. இவர், தனது கூட்டாளியான சேலம் தாதகாப்பட்டியை சேர்ந்த கோபால் என்பவருடன் சேர்ந்து செந்தில் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து திருட முயன்றது தெரியவந்தது.

இதையடுத்து திருட்டு வழக்குப்பதிவு செய்து சஞ்சய்யை கைது செய்தனர். பின்னர் அவரை சேலம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, மத்திய சிறையில் அடைத்தனர். தொடர்ந்து தப்பியோடிய கோபாலை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News