தஞ்சையில் தொழில் உரிமக் கட்டணம் உயர்வு

தஞ்சாவூர் மாநகராட்சியில் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் அனைத்து தொழிலுக்கும் தொழில் உரிமக் கட்டணம் உயர்வு : மாமன்றக் கூட்டத்தில் தீர்மானம்

Update: 2024-03-09 06:50 GMT

தஞ்சாவூர் மாநகராட்சி அலுவலகம் 

தஞ்சாவூர் மாநகராட்சியில் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் அனைத்து தொழிலுக்கும், தொழில் உரிமக் கட்டணத்தை உயர்த்தி மாமன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தஞ்சாவூர் மாநகராட்சியில், வெள்ளிக்கிழமை அவசரக் கூட்டம் மேயர் சண்.ராமநாதன் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்துக்கு துணை மேயர் அஞ்சுகம் பூபதி, ஆணையர் ஆர்.மகேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மாமன்ற உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில் தஞ்சாவூர் மாநகராட்சியில் 1 முதல் 51 வார்டுகளில் ஆங்காங்கே சாலையில் ஏற்பட்ட பழுதுகளை சீரமைப்பது, சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக திரியும் கால்நடைகளை பிடிக்க கூடுதல் வாகனங்களை இயக்குவது, தெருவிளக்குகள் பராமரிப்பது தொடர்பாக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும் தமிழ்நாடு நகர்புற உள்ளாட்சி அமைப்புகள் விதிகள் 2023-இன் படி மாநகராட்சி பகுதிகளில் நடைபெறும் வர்த்தகம், வியாபாரங்கள், தொழிற்சாலைகள், தொழிலகம் மற்றும் பிற நோக்கங்களுக்காக இயங்கி வரும் தொழில்களுக்கு தொழில் உரிமக் கட்டணம் (தொழில்வரி) வரும் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் உயர்த்தப்படுகிறது.

அதன்படி சிறு, குறு தொழில், அனைத்து வகையான கட்டுமானப் பொருட்களை உற்பத்தி செய்தல், அனைத்து வகையான தொழிற்சாலை இயந்திரங்கை உற்பத்தி செய்தல், செங்கல் சூளைகள், ஆட்டோமொபைல் உதிரி பாகங்களை உற்பத்தி செய்தல், அனைத்து வகையான வீட்டு உபயோகப் பொருட்கள் உற்பத்தி செய்தல்,  பூச்சிக் கொல்லிகளை உற்பத்தி செய்தல், அணிகலன்கள், இசைக் கருவிகள், துப்புரவு பொருட்கள், சுண்ணாம்பு காலவாய், அனைத்து வகையான ஆடைகள் உற்பத்தி செய்தல், அனைத்து வகையான வேளாண் பொருட்கள் உற்பத்தி செய்யும் தொழிலுக்கும் தொழில்களுக்கு ஏற்றவாறு உரிமக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

மேலும், சிற்றுண்டிச்சாலை, சிறிய உணவகம், பெரிய உணவகம், திருமண மண்டபம், தங்கும் விடுதிகள், மருத்துவ ஆய்வகங்கள், அரிசி ஆலைகள், ஆடு, கோழி இறைச்சி விற்பனை கடைகள், பால் மற்றும் உணவுப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள், காய்கறிகள், பழங்கள், பூக்களை விற்பனை செய்யும் கடைகள், பேக்கரிகள், பழச்சாறு கடைகள் உள்ளிட்ட அனைத்து சேமிப்பு நிலையங்கள் மற்றும் கடைகள் தொழில் உரிமக் கட்டணத்தை செலுத்தி அதற்கான ரசீதைப் பெற வேண்டும்" என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags:    

Similar News