அதிமுகவிற்கு பிரச்சாரம் - தமிழ்நாடு மக்கள் உரிமை கட்சி
வரும் தேர்தல்களில் நோட்டாவுக்கு வாக்கு அளிக்காமல் அந்த வாக்குகளை, அ.தி.மு.க.வுக்கு அளிக்க பிரசாரம் மேற்கொள்வோம். என தமிழ்நாடு மக்கள் உரிமை கட்சி தெரிவித்துள்ளது.;
மாவட்ட செயற்குழு கூட்டம்
தமிழ்நாடு மக்கள் உரிமை கட்சி சேலம் மாநகர் மாவட்ட செயற்குழு கூட்டம் சேலம் தமிழ் சங்க கட்டிடத்தில் நேற்று நடந்தது. சேலம் மாவட்ட செயலாளர் குமரேசன் தலைமை தாங்கினார். மாநில பொருளாளர் அய்யப்பன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக மாநில தலைவர் பூமொழி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் மாநில மகளிர் அணி தலைவி தேன்மொழி, சேலம் மாவட்ட செயலாளர் ராஜேஸ்வரி, மாநில செயற்குழு உறுப்பினர் செந்தில்குமார், சேலம் மாநகர தலைவர் மணிவண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். சேலம் மாநகர செயலாளர் வெங்கடேசன் நன்றி கூறினார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெற தீவிர தேர்தல் பிரசாரம் மேற்கொள்ளப்படும். தமிழ்நாட்டில் மது இல்லாத போதை பொருட்கள் புழக்கம் அதிகம் உள்ளது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் போதை பொருட்கள் புழக்கத்தை இரும்பு கரம் கொண்டு ஒழிக்க வேண்டும். தமிழ்நாட்டில் ஆறுகளை இணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தெரு நாய் கடிக்கான மருந்துகளில் நடைபெறும் கொள்ளையை தடுக்க வேண்டும். தமிழ்நாட்டில் ஹீமோபிலியா என்ற ரத்தம் உறை தன்மை இல்லாத நோயால் 2,500-க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்நோய் பாதித்தவர்களுக்கு வீடு தேடி சென்று ஊசி மருந்து மாத்திரைகள் அதிகம் வழங்க வேண்டும். கடந்த தேர்தல்களில் நோட்டாவுக்கு வாக்கு அளிக்க பிரசாரம் மேற்கொண்டோம். வருகிற தேர்தல்களில் நோட்டாவுக்கு வாக்கு அளிக்காமல் அந்த வாக்குகளை, அ.தி.மு.க.வுக்கு வாக்கு அளிக்க பிரசாரம் மேற்கொள்வோம். மேலும் வருகிற சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிசாமியை முதல்-அமைச்சராக்க நூதன பிரசாரம் மேற்கொள்வோம். இவ்வாறு அவர் கூறினார்.