தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட வேட்பாளர்களுக்கு தடை - கிராம மக்கள் முடிவு
கிராம சாலைப் பணிகள் 6 மாதங்களாக கிடப்பில் போடப்பட்டதை கண்டித்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் நிர்வாகிகளுக்கு தடை விதிப்பதாக தாடூர் கிராம மக்கள் முடிவு எடுத்து தெரிவித்துள்ளனர்.
திருத்தணி அருகே தாடூர் கிராமத்தில் 150க்கும் மேற்ப்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கிராமத்தில் கம்ம தெரு சாலை குண்டும் குழியுமாக இருப்பதால் 15வது நிதிக்குழு மானியம் திட்டத்திலிருந்து ரூ.3.87 லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு 6 மாதங்களுக்கு முன்பு பணிகள் தொடங்கியது. அப்போது, சாலைப் பணிகள் மேற்கொள்ள இடையூறாக இருந்த வீடுகளின் படிகள் அகற்ற அதிகாரிகள் நடவடிக்கைக்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால் சாலைப் பணிகள் கிடப்பில் போடப்பட்டது. சாலைபணிக்கு பயன்படுத்த அங்குள்ள ஊராட்சி ஒன்றிய தொடப்பள்ளி அருகில் தெருவில் பொதுமக்கள் சென்று வர முடியாத படி வைக்கப்பட்டுள்ள பிவேர் பிளாக் சிமெண்ட் கற்களால் கிராமமக்கள் அவதிப்படுகின்றனர். பாம்புகள் உட்பட விஷ ஜந்துக்கள் அடிக்கடி தேக்கிவைக்கப்பட்டுள்ள பேவர்பிளாக் கற்களில் புகுந்து விடுவதால் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பவும் பெற்றோர் அச்சமடைந்துள்ளனர்.
சாலைப் பணிகள் விரைந்து முடிக்க கோரி ஊராட்சி மன்ற நிர்வாகம், ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை என கிராமமக்கள் குற்றம் சாட்டினர். இதனால் சாலைப் பணிகள் முடிக்காத வரை அரசியல் கட்சிகளின் நிர்வாகிகள் மற்றும் வேட்பாளர்கள் கிராமத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடக்கூடாது என தடை விதித்துள்ளனர். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.