பள்ளத்தில் கவிழ்ந்த சரக்கு ஆட்டோ - பெண் உயிரிழப்பு

விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே விவசாய வேலைக்கு பெண்களை ஏற்றிச் சென்ற டாடா ஏஸ் சரக்கு வாகனம் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் படுகாயமடைந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். காயங்களுடன் 10 பெண்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Update: 2024-01-14 06:59 GMT
விபத்துக்குள்ளான வாகனம் 

விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே உள்ள நாலூர் பகுதியைச் சேர்ந்த ராமுக்காளை என்பவரது மகன் தனுஷ்கோடி (27). இவர் நேற்று காலை நரிக்குடி அருகே உள்ள கண்டுகொண்டான் மாணிக்கம் பகுதிக்கு விவசாயப் பணிக்கு செல்வதற்காக கட்லாங்குளம், சீனிமடை பகுதிகளில் இருந்து 10 க்கும் மேற்பட்ட பெண்களை டாடா ஏஸ் சரக்கு வாகனத்தில் ஏற்றிக்கொண்டு நரிக்குடி - திருப்புவனம் சாலையில் சென்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது ஆண்டுகொண்டான் அருகே சாலையோர வளைவில் சென்ற போது டாடா ஏஸ் சரக்கு வாகனம் நிலைதடுமாறி சாலையோர பள்ளத்தில் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் வாகனத்தில் வந்த 11 பெண்கள் படுகாயமடைந்தனர்.இதனையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற நரிக்குடி போலீசார் காயமடைந்த அனைவரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலமாக திருச்சுழி, அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்தில் கட்டாலங்குளம் பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து என்பவரது மனைவி செல்வி (36) என்பவர் படுகாயமடைந்த நிலையில் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். காயமடைந்த மற்றவர்கள் திருச்சுழி மற்றும் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதற்கிடையில் விபத்து ஏற்படுத்திய டிரைவரான தனுஷ்கோடி வாகனத்தை எடுத்துக் கொண்டு தப்பி ஓடியதாக கூறப்படும் நிலையில், நரிக்குடி போலீசார் அவரை சுற்றி வளைத்து பிடித்து டாடா ஏஸ் சரக்கு வாகனத்தை நரிக்குடி காவல் நிலையம் கொண்டு வந்தனர். மேலும் இந்த விபத்து சம்பவம் குறித்து நரிக்குடி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News