பாசன குளத்தில் தண்ணீர் திறந்தவர் மீது வழக்கு
காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
குமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே அடைக்காக்குழி ஊராட்சிக்கு உட்பட்ட புஷ்பகிரி பகுதியில் அட்டைகுளம் என்ற பாசன குளம் உள்ளது. இந்த குளத்தில் உள்ள தண்ணீரை ஒருவர் ஊராட்சி நிர்வாகத்தின் எச்சரிக்கையை மீறி, திறந்து வீணடித்துள்ளார். சம்பந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்க ஊராட்சி தலைவி ஜெயராணி என்பவர் கொல்லங்கோடு போலீசில் புகார் செய்தார்.
ஆனால் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து சம்பந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கிள்ளியூர் எம்எல்ஏ ராஜேஷ்குமார் தலைமையில் ஊராட்சித் தலைவர் ஜெயராணி மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கொல்லங்கோடு போலீஸ் ஸ்டேஷனில் நேற்று முன்தினம் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து, சம்பந்தப்பட்ட நபர் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்தனர். போராட்டம் கைவிடப்பட்ட நிலையில், அட்டக் குளத்தில் இருந்து தண்ணீரை திறந்து விட்ட பிராக்கோடு பகுதியை சேர்ந்த செல்வகுமார் (57) என்பவர் மீது கொல்லங்கோடு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.