பாபநாசம் பகுதியில் கிடை ஆடுகள்
பாபநாசம் பகுதிகளில மண்வளத்தை மேம்படுத்துவதற்காக வயல்களில் ஆட்டுகிடைகள் அமைக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
தஞ்சை மாவட்டம், பாபநாசம் பகுதிகளில் வயல்களை இயற்கை உர வளத்துடன் மேம்படுத்துவதற்காக ஆட்டு கிடை போடும் வழக்கம் அதிகரித்து வருகிறது. பொதுவாக காவிரி டெல்டா மாவட்டங்களில் சம்பா, தாளடி அறுவடை பணிகள் தை மாதம் தொடங்கி பங்குனி மாதத்தில் நிறைவடையும். அறுவடை முடிந்த பின்னர் விவசாயிகள் வயல்களை வெறுமனையாக வைக்கின்றனர்.
இந்த காலகட்டத்தில் விவசாயிகள் வயல்களில் ஆட்டு கிடைகள் போட்டு மண்வளத்தை மேம்படுத்துகின்றனர்.இதற்காக ஆட்டுகிடை போடுவதற்காக ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் இருந்து ஆடு மேய்ப்பவர்கள் ஆட்டு மந்தைகளை லாரிகளில் ஏற்றிக்கொண்டு காவிரி பாசன பகுதிக்கு அதிகளவில் வருகின்றனர்.
ஆடுகளை வயல்களில் கிடை போடும் போது அவற்றின் சிறுநீர், புழுக்கைகள் வயலுக்கு இயற்கை உரமாக கிடைக்கிறது. இதன் காரணமாக மண்ணின் நீர்பிடிப்புதிறன், காற்றோட்டம், மண்ணின் அடர்வு, மண்ணின் தன்மை, மண்ணின் வளம் அதிகரிக்கிறது. இதன் பலன் சாகுபடியின் போது கண்கூடாக தெரிவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையில் குறுவைசாகுபடியை முன்னிட்டு தஞ்சை பகுதியில் ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் இருந்து ஆட்டுகிடை போடுவதற்காக 50-க்கும் மேற்பட்ட ஆட்டுகிடை குழுவினர் பாபநாசம் சுற்றுப்பகுதிகளில் முகாமிட்டுள்ளனர்.