குடியிருப்புகளில் படியும் சிமெண்ட் படிமங்கள் - பொதுமக்கள் அவதி

தஞ்சாவூர் அருகே ரெடிமிக்ஸ் தொழிற்சாலையால் குடியிருப்புகளில் படியும் சிமெண்ட் படிமங்கள் ஏற்படுத்தும் சுற்றுச்சூழல் மாசுவால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.

Update: 2024-06-25 06:24 GMT

 தஞ்சாவூர் அருகே கண்டிதம்பட்டு ஊராட்சியில் பொட்டுவாச்சாவடி பகுதியில் ஏராளமான வீடுகள் உள்ளது. தஞ்சாவூர் புறவழிச்சாலையை அருகே உள்ள இந்த பகுதியில் பல நகர்களில் வீடுகளை புதிதாக கட்டியும் பொதுமக்கள் பலர் வசித்து வருகின்றனர். இந்நிலையில், அந்த பகுதியில் ஒரு ரெடிமிக்ஸ் (சிமெண்ட் கலவை) தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையிலிருந்து தினமும் ரெடிமிக்ஸ் கலவை அரைத்து, லாரிகள் மூலம் தஞ்சாவூரின் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.

தினமும் இந்த ரெடிமிக்ஸ் தொழிற்சாலை தொடர்ந்து பலமணி நேரம் இயங்குவதால், அதிலிருந்து சிமெண்ட் படிமங்கள் காற்றில் பரவி அருகில் குடியிருப்புகளில் உள்ள வீடுகளில் படிந்து வருகிறது. இதனால் வீடுகளில் உணவு பொருட்கள், துணிகள், குடிநீரில் படிந்து வருகிறது. இதனால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதோடு, அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு சுவாசக் கோளாறும் ஏற்படுகிறது என அப்பகுதி பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்துக்கு முறையிட்டுள்ளனர்.

ரெடிமிக்ஸ் தொழிற்சாலையில் போதிய பாதுகாப்பு வசதி இல்லாத காரணத்தால் காற்றில் இந்த சிமெண்ட் கலவை படிமங்கள் பரவி, பொதுமக்கள் மீது படர்வதால், சில நேரங்களில் கண் எரிச்சல் போன்ற உடல் உபாதைகள் ஏற்படுகிறது. எனவே ரெடிமிக்ஸ் தொழிற்சாலையை உரிய பாதுகாப்பு அம்சங்களோடு நடத்தவும், இல்லையென்றால் அங்கிருந்து அகற்றவும் மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News