மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர் சங்கத்தினர் உண்ணாவிரதம்
காஞ்சியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர் சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Update: 2024-01-08 02:28 GMT
காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர்கள் சங்கம் சார்பில், பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி, காஞ்சிபுரம்சேக்குபேட்டையில் தலைமை அலுவலகம் முன், சங்க பொதுச்செயலர் ரமணன் தலைமையில் நேற்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர்களுக்கு, கடந்த ஆட்சியில் வழங்கியதை போல், 20 சதவீத ஊதிய உயர்வு வழங்க வேண்டும். ஊதிய உயர்வு ஆணையில், ஊழியர்கள் ஏற்கனவே பெற்று வந்த உரிமைகள், சலுகைகளை பறிக்கக் கூடாது. தமிழ்நாட்டில் உள்ள 23 மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கிகளை இணைத்து 'தமிழ்நாடு வங்கி' என, உருவாக்க வேண்டும். மாநில அரசின் அனைத்து பொதுத்துறை ஊழியர்களுக்கும் 20 சதவீதம் போனஸ் வழங்கப்பட்டது. ஆனால், கூட்டுறவு ஊழியர்களுக்கு 10 சதவீதம் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 10 சதவீதம்போனஸ் வழங்க வேண்டும். ஊழியர்களின் கடன்களுக்கு, ஏற்கனவே பெற்று வந்த வட்டி விகிதம் உயர்த்தியதை திரும்ப பெற வேண்டும். ஊதிய உயர்வு நிலுவைத் தொகை வழங்குதலுக்கு புதிய நடைமுறையின்படி மேலாண்மை இயக்குனர், செயலாட்சியர், முதன்மை நிர்வாக அலுவலர், பொது மேலாளர் ஆகியோருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதை முற்றிலும் ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்."