தேர் கட்டுமான பணிகள் 90 சதவீதம் நிறைவு
கும்பகோணத்தை அடுத்த பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் கோவிலில் புதிய தேர் கட்டுமான பணிகள் 90 சதவீதம் நிறைவு பெற்றுள்ளது.
கும்பகோணத்தை அடுத்த பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் கோவிலில் புதிய தேர் கட்டுமான பணிகள் 90 சதவீதம் நிறைவு பெற்றுள்ளது. கும்பகோணத்தை அடுத்த பட்டீஸ்வரம் பகுதியில் தேனுபுரீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சிவன், பார்வதி தேவி சன்னதிகள் தவிர, ஸ்வர்ண விநாயகர், முருகன், சோமாஸ்கந்தர், நடராஜர், கஜலட்சுமி, காசி விஸ்வநாதர், சண்முகர் ஆகிய 6 முகங்கள் கொண்ட சண்முகர், சுப்பிரமணியர், துணைவியருடன் சுப்பிரமணியர், சப்தமதாஸ், நவக்கிரகம், மூவர், 63 நாயன்மார்கள் ஆகியோரின் சன்னதிகள், ராமர், பைரவர், திருஞானசம்பந்தர், மாதவரணப் பிள்ளையார், மகாலிங்கம், ஆஞ்சநேயர், சனீஸ்வரர், சூரியன், ரேணுகாதேவி, கீர்த்திவாசர், வேதலிங்கம் மற்றும் தண்டபாணி ஆகிய சாமிகள் உள்ளன. மேலும் கருவறையைச் சுற்றியுள்ள இடத்தில் தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை மற்றும் சண்டிகேஸ்வரர் சாமிகளும் உள்ளன. இந்த கோவிலில் உள்ள துர்க்கை அம்மனை வழிபட ஆடி மாதத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பட்டீஸ்வரம் கோவிலுக்கு வருவது வழக்கம்.
இந்த கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி விசாக திருவிழா 10 நாள் உற்சவமாக விமர்சையாக நடைபெறும். ஆனால், கோவிலுக்கு தேர் இல்லாததால் அந்த உற்சவத்தின் போது கட்டுத்தேரைக் கொண்டு விழாக்களை நடத்தி வந்தனர். இதனைத் தொடர்ந்து, புதிய தேர் வடிவமைக்க பக்தர்கள் உள்பட பல்வேறு தரப்பினர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். அதன் படி தேனுபுரீஸ்வரர் கோவிலுக்கு இந்து சமய அறநிலைய துறை சார்பில் தேர்கட்ட முடிவு செய்யப்பட்டது. இதற்காக ரூ.87 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கப்பட்டது. இதுகுறித்து கோவில் நிர்வாகிகள் கூறுகையில், இந்த கோயிலுக்கு இலுப்பை மரத்தினால் வடிவமைக்கப்படும் புதிய தேர், திருக்கோவில் நிதியில் ரூ.43 லட்சத்து 50 ஆயிரமும், ஆணையர் பொது நிதியிலிருந்து ரூ.43 லட்சத்து 50 ஆயிரம் என ரூ.87 லட்சம் மதிப்பில் கட்டப்படுகிறது. இந்த தேரின் எடை சுமார் 52 டன் ஆகும். 17 அடி அகலத்திலும், மரத்தேர் மட்டும் 22 அடி உயரத்திலும், அலங்காரத்துடன் 48 அடி உயரத்தில் வடிவமைக்கப்படவுள்ளது. இந்த தேர்கட்டுமான பணியை ஒரு நாளைக்கு 10 பேர் வீதம் பணிகள் செய்து வருகின்றனர். தேருக்கான பணிகள் 90 சதவீதம் முடிந்துள்ளது. இன்னும் அலங்கார வேலைபாடுகள் உள்ளன. இந்த நிலையில், திருச்சி பெல் நிறுவனத்தில் இருந்து ரூ.12 லட்சம் மதிப்பில் சக்கரங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. தேர் கட்டுமான பணிகள் மும்முரமாக நடந்து வருவகிறது. மேலும் கோவில் சார்பில தேரோட்டத்திற்கான சாலை அமைக்கும் பணிகள் நடக்க உள்ளது. தேரை பாதுகாப்பாக நிறுத்தி வைக்க ரூ.15 லட்சம் மதிப்பில் தேர் கூடாரம் அமைக்க உள்ளது என்று கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.