ஊதியூர் செல்லாண்டியம்மன் கோவிலில் யாக பூஜை
ஊதியூர் அருகே 700 வருட பழமையான செல்லாண்டியம்மன் கோவிலில் நடைபெற்ற யாக பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அடுத்த ஊதியூர் பொன்னூதி மாமலையின் தென்புறமும் மரவபாளையம் அப்பண்ண பரமேஸ்வரர் கோவிலின் மேற்கு புறமும் அமைந்துள்ள முதலிபாளையம் கிராமம் நத்தகாட்டுப்புதூரில் பிரசித்தி பெற்ற செல்லாண்டியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் உள்ள அம்மன் சிலை சுமார் 700 வருடங்கள் பழமையானது என்றும், உளியால் துளைபடாத சிலையென்றும் கூறப்படுகிறது. இந்த அம்மனை வழிபட்டு சென்றால் மனக்குழப்பம், மனநோய், எதிர்வினைகள் ஆகியவை அகலும் என்றும் பக்தர்கள் கூறுகின்றனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இக்கோவிலில் 2ஆம் ஆண்டு யாக பூஜை நடத்தப்பட்டது. இப்பூஜையில் அனைத்து ராசிகளுக்கும் குருப்பெயர்ச்சி பலன்கள் கிடைக்கவும், உலக மக்கள் நலன் கருதியும் இப்பூஜை புளியம்பட்டி, கருக்கம்பாளையம், நத்தக்காட்டுப் புதூர், அவிநாசி பாளையம் புதூர் ஊர்களை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் ஆந்தைக்குல சமுதாயத்தினர் சுமார் 700க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கூட்டுப் பிரார்த்தனை நடத்தினர். இதனை அடுத்து சுவாமிக்கு அபிஷேகம் ஆராதனைகள் நடத்தப்பட்டு கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.