கோழிக்கழிச்சல் நோய் தடுப்பூசி முகாம்
பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று முதல் வரும் 14-ம் தேதி வரை கால்நடை பராமரிப்புத் துறையின் மூலம் கோழிக்கழிச்சல் நோய் தடுப்பூசிப்பணி முகாம் நடைபெறுவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Update: 2024-02-01 01:44 GMT
பெரம்பலூர் மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறையின் மூலம் ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் கோழிக்கழிச்சல் நோய் தடுப்பூசிப்பணி இருவார முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இந்தாண்டும் பிப்ரவரி - 1 ம் தேதி முதல் பிப்ரவரி -14 ம் தேதி வரை இருவாரங்கள் கோழிகளுக்கு கோழிக்கழிச்சல் நோய் தடுப்பூசிப்பணி இருவார முகாம் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கால்நடை மருந்தகங்களுக்குட்பட்ட கிராமங்களில் நடைபெறவுள்ளது. இந்த முகாமில் 8 வாரம் மற்றும் அதற்கு மேற்பட்ட அனைத்து கோழிகளுக்கும் இந்த தடுப்பூசிப்பணி இலவசமாக மேற்கொள்ளப்படவுள்ளது. எனவே அனைத்து கோழி வளர்ப்போர், பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் இம்முகாமில் கலந்துகொண்டு தங்கள் கோழிகளுக்கு தடுப்பூசி போட்டு பயன்பெற வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் கற்பகம் தகவல் தெரிவித்துள்ளார்.