மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்
தாரமங்கலத்தில் மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் பொதுமக்களிடம் மனுக்கள் பெறப்பட்டது.
கள ஆய்வில் முதலமைச்சர் என்ற முன்னெடுப்பின் நீட்சியாக அன்றாடம் அரசு துறைகளை அணுகும் பொதுமக்களுக்கு அரசு அலுவலகங்கள் வழங்கும் சேவைகளை மேலும் செம்மைப்படுத்தி அரசின் சேவைகள் பொதுமக்களுக்கு விரைவாகவும்,எளிதாகவும் சென்று சேரும் வகையில் மக்களுடன் முதல்வர், இல்லம் தேடி சேவை என்ற புதிய திட்டங்களை தமிழ்நாடு முதலமைச்சர் தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தை சேலம் மாவட்டத்தில் முதல் கட்டமாக சேலம் மாநகராட்சி ,அனைத்து நகராட்சி, பேரூராட்சி மற்றும் நகரங்களை சுற்றி உள்ள கிராம பஞ்சாயத்து பகுதிகளில் கடந்த 18ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதன் ஒரு பகுதியாக சேலம் மாவட்டம் தாரமங்கலம் நகராட்சிக்கு உட்பட்ட 10, 11 , 13, 17 மற்றும் 18 வார்டுகளில் வசிக்கும் பொதுமக்கள் செங்குந்தர் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் முகாமில் காலை 10 மணி முதல் 3மணி வரை முகாம் கண்காணிப்பு அலுவலர்கள் மற்றும் முகாம் பொறுப்பாளர்களிடம் பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை மனுக்களாக எழுதி அவர்களிடம் வழங்கினர். மேலும் இந்த முகாமில் வாங்கப்படும் மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு 30நாட்களுக்குள் தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது ஆகும்.