"தென்கிழக்காசியாவில் சோழப் பேரரசு 1000" பன்னாட்டுக் கருத்தரங்கம் இலச்சினை வெளியீடு
தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தில் பன்னாட்டு கருத்தரங்கம் தொடர்பாக நிகழ்வு நடைபெற்றது.
Update: 2024-03-05 17:34 GMT
தெற்காசியா மற்றும் தென்கிழக்காசியத் தீபகற்பத்தில் இருந்த நாடுகளை முதலாம் இராசேந்திரச் சோழன் வென்றதன் ஆயிரமாவது ஆண்டு தொடக்கத்தை ஒட்டி, தமிழ்ப் பல்கலைக்கழகம் ஒரு பன்னாட்டுக் கருத்தரங்கத்தை நடத்தவுள்ளது. இந்திய வரலாற்றிலேயே முன்னெப்போதும் இல்லாத வகையில், தமிழகத்தை ஆண்ட சோழப் பேரரசன் முதலாம் இராசேந்திரன் பெரும் கடற்படையை வலிமையாகக் கட்டமைத்து, தெற்காசியா மற்றும் தென்கிழக்காசியத் தீபகற்பத்தில் இருந்த பத்துக்கும் மேற்பட்ட நாடுகளை வென்று வாகை சூடினான். அந்நிகழ்வின் ஆயிரமாவது ஆண்டு தொடங்குவதை ஒட்டி, தமிழ்ப் பல்கலைக்கழகம் உலகளவிலான பன்னாட்டுக் கருத்தரங்கம் ஒன்றை எதிர்வரும் மே மாதத்தில் நடத்தவிருக்கின்றது. குறிப்பாக, இராசேந்திரன் பயணித்த கடல்பாதையிலேயே கப்பலில் நடத்தப்படவுள்ள இப்பன்னாட்டுக் கருத்தரங்கில், தமிழகத்தின் வரலாற்றாய்வாளர்கள், கல்வியாளர்கள் மற்றும் சோழர்காலம் குறித்து ஆய்வு நிகழ்த்தும் மாணாக்கர்கள் ஆய்வுக்கட்டுரைகளைப் படைக்கவுள்ளனர். இப்பன்னாட்டுக் கருத்தரங்கின் இலச்சினையை வெளியிடும் நிகழ்வு தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வில், அமெரிக்காவின் ஹார்வர்ட் பல்கலைக்கழகத் தமிழ் ஆய்விருக்கையின் பொறுப்பாளர் மருத்துவர் ஜானகிராமன் கருத்தரங்க இலச்சினையை வெளியிட, தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் வி.திருவள்ளுவன் பெற்றுக் கொண்டார். மேலும், இந்நிகழ்வில் மருத்துவர் திருஞானசம்பந்தன் அறக்கட்டளை நிறுவுநர் விஜயலட்சுமி, இப்பன்னாட்டுக் கருத்தரங்கின் ஒருங்கிணைப்பாளர்களான பேராசிரியர் முனைவர் சி.தியாகராஜன், முனைவர் பெ.இளையாப்பிள்ளை, முனைவர் இரா.குறிஞ்சிவேந்தன் மற்றும் மக்கள் தொடர்பு அலுவலர் முனைவர் இரா.சு.முருகன் ஆகியோரும், இம்மாநாட்டு இலச்சினையை வடிவமைத்த அயல்நாட்டுத் தமிழ்க்கல்வித்துறை ஆய்வாளர் செந்தில் முருகன் மற்றும் கலைச்செல்வன் ஆகியோர் பங்கேற்றனர்.