பா.ஜ.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் இரு தரப்பினர் இடையே கைகலப்பு
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் நேற்று நடந்த பா.ஜ.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் இரு தரப்பினர் இடையே கைகலப்பு ஏற்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த தச்சூர் கூட்டு சாலையில் நேற்று தனியார் திருமண மண்டபத்தில் பா.ஜ.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. பிப்ரவரி-9ஆம் தேதி பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலையின் என் மண் என் மக்கள் பயணம் தொடர்பாக திருவள்ளூர் மாவட்ட பாஜக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
அப்போது பொன்னேரி நகர தலைவர் சிவகுமார் மற்றும் விளையாட்டு பிரிவு நிர்வாகி வினோத்குமார், பிரவீன், வெங்கட் ஆகியோருக்கு இடையே தகராறு ஏற்பட்டு கைகலப்பாகி உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக பொன்னேரி நகர தலைவர் சிவகுமார், சோழவரம் வடக்கு ஒன்றிய தலைவர் ஜெயக்குமார் ஆகியோர் தனித்தனியே கவரைப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இருதரப்பு புகார்களின் பேரில் பொன்னேரி நகர தலைவர் சிவகுமார் மீது ஒரு வழக்கும், விளையாட்டு பிரிவு நிர்வாகி வினோத்குமார், பிரவீன், வெங்கட் உள்ளிட்ட சிலர் மீது ஒரு வழக்கும் என இரண்டு வழக்குகளை பதிவு செய்து கவரப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாஜக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் இருதரப்பினருக்கு இடையே தகராறு ஏற்பட்டு ஒருவர் மீது ஒருவர் புகார் அளித்து வழக்கு பதிவு செய்த சம்பவம் பாஜக நிர்வாகிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே சென்னையில் பிரதமர் மோடி வருகையின்போது ஆள் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறில் பா.ஜ.க. மகளிரணி நிர்வாகி ஒருவர் தாக்கப்பட்டதும், இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரில் பா.ஜ.க. மாநில நிர்வாகி அமர்பிரசாத் ரெட்டியை போலீசார் தேடி வருவதும் குறிப்பிடத்தக்கது.