கோவையில் போஸ்டர் மூலம் அரசியல் கட்சியினரிடையே கருத்து மோதல்
கோவையில் பாஜக-திமுக போஸ்டர் யுத்தம் நடத்தி வருகிறது.
நாடாளுமன்ற தேர்தலையொட்டி அரசியல் கட்சியினர் தங்களது பிரச்சாரத்தை தீவிரப்படுத்தி வருகின்றனர்.குறிப்பாக தற்போது போஸ்டர்கள் மூலம் அரசியல் கட்சியினரடையே கருத்து மோதல்களும் ஏற்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கோவை சுற்றுவட்டார பகுதிகளில் ஒன்றிய பாஜக அரசை விமர்சித்து கருப்பு பணம் மீட்பு, ஆண்டுக்கு 2 கோடி வேலை வாய்ப்பு, அனைவருக்கும் சொந்த வீடு, வங்கிக் கணக்கில் ரூ.15 லட்சம் உள்ளிட்ட பொய் வாக்குறுதிகள் மற்றும் சென்னை வெள்ள நிவாரண நிதி வழங்காததை விமர்சித்து கோவை மாநகராட்சி வடக்கு மண்டல தலைவர் வே.கதிர்வேல் பெயரில் இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.
நடிகர் வடிவேலின் நகைச்சுவை காமெடியுடன் ஒப்பிட்டு ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டர்கள் பொதுமக்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது. அதேபோல் தற்போது கோவையில் பாஜகவினர் திமுக ஆட்சியை குடும்ப ஆட்சி என விமர்சித்து போஸ்டர் ஒட்டியதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக "ஆமா குடும்ப ஆட்சி தான் தமிழ்நாட்டு குடும்பங்களின் ஆட்சி" என தமிழக அரசின் நான் முதல்வன், உரிமைத் தொகை,புதுமைப்பெண்,
தமிழ் புதல்வன் உள்ளிட்ட குடும்பத்தில் உள்ள மகள், மகன்,அம்மா உள்ளிட்டோருக்கு தமிழக அரசு செயல்படுத்திய திட்டங்களை பட்டியலிட்டு போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.இந்த போஸ்டர்கள் தற்போது இணையத்திலும் வைரலாகி உள்ளது.