கன்னியாகுமரியில் மத்திய அரசின் தூய்மை பணி
கன்னியாகுமரியில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் தேசிய புள்ளியியல் அலுவலகம் சார்பில் தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டது.
மத்திய அரசின் புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் கீழ் உள்ள தேசிய புள்ளியியல் அலுவலகம் சார்பில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கடந்த 16-ந்தேதி முதல் 30-ம் தேதி வரை இந்தியா முழுவதும் உள்ள முக்கியமான நகரங்களை குப்பையில்லா நகரமாக மாற்றுவதற்காக தூய்மை பணியை மேற்கொண்டு வருகிறது. இதையொட்டி இந்த ஆண்டுக்கான "ஸ்வச்சதா சக்வாடா" என்ற திட்டத்தின் கீழ் கன்னியாமரியை குப்பை இல்லா நகரமாக மாற்ற இந்த அமைச்சகம் முடிவு செய்தது.
அதனைத் தொடர்ந்து இந்த அமைச்சகத்தின் மதுரை மண்டலத்தின் இயக்குநர் விஷ்ணுராஜ் தலைமையில் தூய்மை பணி மற்றும் விழிப்புணர்வு பேரணி கன்னியாகுமரி காந்தி மண்டபத்தில் இருந்து இன்று காலை தொடங்கியது. மேலும் திருநெல்வேலி துணை மண்டலத்தின் புள்ளியியல் அலுவலகத்தின் ஊழியர்கள் இணைந்து வருடத்திற்கு 100 மணிநேரம், அதாவது வாரத்திற்கு இரண்டு மணிநேரம், தூய்மைக்காக தன்னார்வத்துடன் பணியாற்றுவேன் என்றும், குப்பை இல்லா நகரமாக மாற்றுவதற்கான உறுதி மொழியையும் எடுத்துக்கொண்டனர்.
தொடர்ந்து இந்த பேரணி கன்னியாகுமரி திரிவேணி சங்கமம் கடற்கரை வரை சென்று தூய்மை பணியில் ஈடுபட்டனர். தூய்மை பணி மற்றும் பேரணியை நெல்லை துணை மண்டலத்தின் உதவி இயக்குநர் அஜித்குமார் முன்னிலையில் மூத்த புள்ளியியல் அதிகாரி சண்முகம் தொடங்கி வைத்தார். இதில் நெல்லை துணை மண்டலத்தின் புள்ளியியல் அலுவலகத்தின் ஊழியர்கள் கலந்துகொண்டு கன்னியாகுமரி முக்கடல் சங்கம் கடற்கரையை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.