திருவள்ளூர் பகுதிக்கு 10 புதிய பேருந்துகளை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!!
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் திருவள்ளூர் பகுதி மக்களுக்கு 10 புதிய பேருந்துகள் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்திற்கு 2023-24ம் ஆண்டிற்கு 247 புறநகர பேருந்துகள் மற்றும் 64 நகர பேருந்துகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதில் பழைய பேருந்துகளுக்கு மாற்றாக இதுவரை 134 புறநகர் பேருந்துகள் மற்றும் 12 நகர பேருந்துகள் புதிதாக கூண்டு கட்டி தடத்தில் இயக்கப்பட்டுள்ளது. மேலும், தற்போது திருவள்ளூர் மாவட்ட பகுதி மக்கள் பயனடையும் வகையில் ரூ.3.81 கோடி செலவில் 8 புறநகர பேருந்துகள் மற்றும் 2 புதிய மகளிர் விடியல் பயண நகர பேருந்துகள் என மொத்தம் 10 புதிய பேருந்துகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவள்ளூர் மாவட்டம், மப்பேடு கூட்ரோட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில், சசிகாந்த் செந்தில் எம்பி, எம்எல்ஏக்கள் வி.ஜி.ராஜேந்திரன், இனிகோ இருதயராஜ், எஸ்.சந்திரன், தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை செயலாளர் ஜெய முரளிதரன், பள்ளிக்கல்வி துறை செயலாளர் குமரகுருபரன், திருவள்ளூர் மாவட்ட ஆட்சி தலைவர் பிரபுசங்கர், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.