மக்களுடன் முதல்வர் திட்ட ஆய்வு கூட்டம்

மக்களுடன் முதல்வர்” திட்ட முகாம் நடைபெற உள்ளதை முன்னிட்டு முன்னேற்பாடு பணி குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

Update: 2024-07-03 12:13 GMT

ஆய்வு கூட்டம் 

பெரம்பலூர் மாவட்டத்தில் ஊரகப் பகுதிகளில் ”மக்களுடன் முதல்வர்” திட்ட முகாம் 11.07.2024 அன்று முதல் நடைபெற உள்ளதை முன்னிட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியர் க.கற்பகம் தலைமையில் இன்று ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்ததாவது: பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்கள் நடத்தப்பட்டதை தொடர்ந்து அடுத்த கட்டமாக 11.07.2024 முதல் 14.09.2024 வரை ஊரக பகுதிகளில் நடைபெறவுள்ளது. பெரம்பலூர் வட்டத்தில் 06 முகாம்களும், ஆலத்தூர் வட்டத்தில் 8 முகாம்களும், வேப்பூர் வட்டத்தில் 8 முகாம்களும், வேப்பந்தட்டை வட்டத்தில் 9 முகாம்களும் என 31 முகாம்கள் பெரம்பலூர் மாவட்டத்தில் நடைபெற உள்ளது.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 11.07.2024 அன்று தர்மபுரி மாவட்டத்தில் ஊரகப்பகுதிகளில் ”மக்களுடன் முதல்வர்” திட்ட முகாமினை தொடங்கி வைக்கவுள்ளார்கள். அதனைத்தொடர்ந்து, பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர் வட்டாரம் தேர்வு செய்யப்பட்டு சிறுவாச்சூர் ஊராட்சியில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை திருமண மஹாலில் 11.07.2024 அன்று மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடைபெற உள்ளது. பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்று அரசின் சேவைகள் தங்கு தடையின்றி உடனடியாக கிடைக்க மக்களுடன் முதல்வர் திட்டம் செயல்படுத்தப்படுகின்றது. கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் இந்த முகாம்களை நடத்துவதன் மூலம் ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் மக்களின் கோரிக்கைகள் நிவர்த்தி செய்யப்படும். மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் பொதுமக்கள் அன்றாடம் வைக்கும் அடிப்படை கோரிக்கைகளின் 45 வகையான சேவைகள் வழங்கப்படுகின்றது. பொதுமக்களிடமிருந்து வரப்பெற்ற மனுக்கள் அனைத்தும் இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதை உறுதி செய்து முதல்வரின் முகவரி துறைக்கு புள்ளி விவரங்களை அனுப்பி வைக்க வேண்டும். முகாம் நடைபெறும் இடத்தில் தங்கள் துறை சார்ந்த திட்டங்கள் மற்றும் இணைக்கப்பட வேண்டிய ஆவணங்கள் குறித்தும் விளம்பரப் பலகைகள் அமைத்திட வேண்டும்.

முகாமில் பெறப்படும் மனுக்கள் அதிகபட்சமாக 30 நாட்களுக்குள் முடிவு செய்யப்பட வேண்டும். மனுக்களின் மீது உரிய நடவடிக்கை எடுத்து இறுதியான பதிலினை மட்டுமே பதிவேற்றம் செய்ய வேண்டும். மனுதாரர்களுக்கு இடைக்கால பதில்களை வழங்கக் கூடாது.

முகாமில் பதிவு செய்யப்பட்ட கோரிக்கைக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் பரிசீலனை செய்து எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பான விளக்கத்தை ஒரு மனு உரிய காரணங்களால் நிராகரிக்கப்டுகின்றது என்றால், சம்பந்தப்பட்ட துறை சார்ந்த மாவட்ட நிலை அலுவலர்கள் ஒப்புதல் பெற்ற பின்னரே நிராகரிக்கப்பட வேண்டும். முகாம்களில் பெறப்படும் மனுவானது சம்பந்தப்பட்ட துறையினரால் நிராகரிக்கப்பட்டால் அதற்கான முறையான ஆவணங்களை இணைத்து நிராகரிக்கப்பட வேண்டும். நிராகரிக்கப்பட்டதற்கான உத்தரவுகள் மனுதாரருக்கு தபால் மூலம் தெரிவிக்கப்பட வேண்டும். அலுவலர்கள் அளிக்கும் பதில்கள் ஆய்வுக்காக உயரதிகாரிகளுக்கு தோராயமாக ஒதுக்கப்படும். நிராகரிக்கப்பட்ட அனைத்து மனுக்களும் துறை சார்ந்த உயர் அலுவலர்களால் சரிபார்க்கப்படும். மக்களுடன் முதல்வர் திட்ட மனுக்களுக்கு வழங்கப்படும் அங்கீகரிக்கப்படாத பதில்கள் மறுபரிசீலனைக்காக பொறுப்பான அதிகாரிக்கு திருப்பி அனுப்பி வைக்கப்படும். மாநில அளவில் உள்ள முதல்வரின் முகவரி துறையின் மூலம் மனுதாரருக்கு வழங்கப்படும் அனைத்து பதில்களும் 100% ஆய்வுக்கு உட்படுத்தப்படும். முதல்வரின் முகவரி துறையில் உள்ள அலுவலர்கள் மனுதாரர்களின் கைப்பேசி எண்ணை தொடர்பு கொண்டு குறைகள் முழுமையாக நிவர்த்தி செய்யப்பட்டதா என்பதை ஆய்வு செய்து அது குறித்த அவர்களின் கருத்தைப் பெற்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்வார்கள்.

முகாமில் பெறப்படும் ஒவ்வொரு மனுவிற்கும் மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். எனவே, இந்த முகாமின் முக்கியத்துவத்தை உணர்ந்து ஒவ்வொரு துறைசார்ந்த அலுவலர்களும் பொதுமக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணத்துடன் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்ற வேண்டும். என தெரிவித்தார்.

Tags:    

Similar News