பணி நேர பிரச்சனையில் சக ஊழியருக்கு கத்தி குத்து
கோவையில் பணி நேர பிரச்சனையில் சக ஊழியரை கத்தியால் குத்திய பாதுகாவலரை போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
கோவை:திண்டுக்கல் மாவட்டம் பழனி நரிக்கல்பட்டி பகுதியை சேர்ந்தவர் முருகேசன்(46). புலியகுளம் பகுதியில் மனைவியுடன் கடந்த மூன்றரை ஆண்டுகளாக வசித்து வரும் இவர் தனியார் செக்யூரிடி நிறுவனத்தில் பாதுகாவலராக பணியாற்றி வருகிறார்.இதே நிறுவனத்தில் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த தங்கராசு(50) என்பவரும் பணியாற்றி வரும் நிலையில் இருவருக்கும் இடையே ஓவர் டைம் பணிபுரிவது தொடர்பான பிரச்சினை இருந்து வந்துள்ளது. இந்நிலையில் நேற்று சுங்கம் பார்க் டவுன் பகுதியில் உள்ள ஐ.டி நிறுவனத்தில் பணியில் உள்ள தங்கராசுவை விடுவித்து அங்கு பணியை தொடர நிறுவனத்தின் சார்பில் முருகேசனிடம் கூறப்பட்டுள்ளது.
அங்கு சென்ற அவர் தான் பணியை தொடரவில்லை என கூறிய நிலையில் அதனை பொருட்படுத்தாமல் தங்கராசு அங்கிருந்து கிளம்பி அருகில் உள்ள மற்றொரு கம்பெனிக்கு பணிக்கு சென்றுள்ளார்.இரவு ஒன்பது மணியளவில் தங்கராசு பணியில் இருந்த இடத்திற்கு சென்ற முருகேசன் தனது பணி நேரம் குறித்து கேள்வி எழுப்பியதால் ஆத்திரமடைந்த தங்கராசு முருகேசனை கீழே தள்ளி அவரது வயிற்றில் கத்தியால் குத்தியதில் ரத்தம் வழிந்தது.வலியால் அலறிய முருகேசனை அருகில் இருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனை அனுப்பி வைத்தனர்.முருகேசன் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த ராமநாதபுரம் போலீசார் தங்கராசுவை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.