டிரோன்கள் பறக்க தடை விதித்த மாநகர காவல் துறை
வாக்கு எண்ணிக்கை மையம் அமைக்கப்பட்டுள்ள அரசு தொழில்நுட்பக் கல்லூரியை சுற்றியுள்ள பகுதிகளில் டிரோன்கள் பறப்பதற்கு ஜூன் 4ம் தேதி வரை தடை விதிக்க மாநகர காவல்துறை திட்டமிட்டுள்ளது.
கோவை மக்களவைத் தொகுதிக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் தடாகம் சாலையில் உள்ள அரசு தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று முதல் அந்த பகுதி தற்காலிக ரெட் ஜோனாக கோவை மாநகர காவல் துறையால் அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசு தொழில்நுட்பக் கல்லூரியை சுற்றியுள்ள சாய்பாபா காலனி,வெங்கடாபுரம்,வேலாண்டிபாளையம், இடையர்பாளையம்,வடகோவை,ஆர் எஸ் புரம், பூசாரிபாளையம்,சீரநாயக்கன்பாளையம், வடவள்ளி,பி.என்.புதூர் ஆகிய பகுதிகள் அனைத்தும் தற்காலிக ரெட் ஜோன் பகுதிகளாக அறிவிக்கப்பட்டு இன்று முதல் வரும் ஜூன் 4ம் தேதி வரை இந்த பகுதிகளில் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசால் 2021ல் கொண்டு வரப்பட்ட டிரோன் விதிமுறைகளில் 96 மணி நேரங்களுக்கு மட்டுமே டிரோன்கள் பறக்க தடை விதிக்க முடியும் என்ற நிலையில் இன்று முதல் மே 2ம் தேதி வரை 96 மணி நேரத்திற்கு கோவை மாநகர காவல் துறையினர் டிரோன்கள் பறக்க தடைவிதித்துள்ளனர்.இந்த உத்திரவினை வரும் ஜூன் 4 ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் வரை 96 மணி நேரத்திற்கு ஒரு முறை உத்திரவினை பிறப்பிக்க மாநகர காவல் துறை திட்டமிட்டுள்ளனர்.