மல்லசமுத்திரத்தில் தார் சாலை பணிகளை ஆய்வு செய்த ஆட்சியர்!
நாமக்கல் மாவட்டம், மல்லசமுத்திரம் மற்றும் எலச்சிபாளையம் ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட பகுதிகளில் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, ரூ.1.04 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ள வளர்ச்சித்திட்ட பணிகள் குறித்து இன்று (22.5.2024) ஆய்வு மேற்கொண்டார்.
மல்லசமுத்திரம் ஊராட்சி ஒன்றியம், சப்பையாபுரம் ஊராட்சியில், வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ், மகளிர் சுய உதவிக்குழுவினர் தறி மூலம் சேலை நெசவு செய்து வருவதை பார்வையிட்டு, சேலைகளின் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டார். மேலும், மகளிர் சுய உதவிக்குழுவினர் உற்பத்தி செய்த சேலை ரகங்களை பார்வையிட்டு உற்பத்தி செய்ய தேவைப்படும் நாட்கள், அதன் விலை மதிப்பு இதன் மூலம் கிடைக்கபெறும் இலாபம் உள்ளிட்ட பல்வேறு விபரங்களை கேட்டறிந்தார்.
தொடர்ந்து, முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.54.78 இலட்சம் மதிப்பீட்டில் கருமனூர் ஊராட்சியில் கவுண்டம்பாளையம் முதல் பூசாரிக்காடு சாலை வரை 1.40 கி.மீ நீளத்திற்கு சாலை அமைக்கப்பட்டுள்ளதையும், அவினாசிப்பட்டி ஊராட்சியில் ரூ.49.24 இலட்சம் மதிப்பீட்டில் கூத்தகவுண்டம்பாளையம் முதல் வட்டூர் வரை தார்சாலை அமைக்கப்பட்டுள்ளதையும் பார்வையிட்டு சாலையின் தரம், நிர்ணயிக்கப்பட்டு அளவீடுகளின் படி சாலை அமைக்கப்பட்டுள்ளதா என பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அதனைத்தொடர்ந்து, எலச்சிபாளையம் ஊராட்சி ஒன்றியம், குமாரமங்கலத்தில் மகளிர் திட்டத்தின் மூலம் கடன் உதவி பெற்று தறி அமைக்கப்பட்டு வேட்டி நெசவு செய்து வருவதையும், கிளாப்பாளையத்தில் மகளிர் சுய உதவிக்குழுவினர் ஆயத்த ஆடை தொழில் மேற்கொண்டு வருவதையும் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.