இலவச வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி ஆட்சியர் அலுவலகம் முற்றுகை

Update: 2023-11-21 04:06 GMT
பொதுமக்கள் முற்றுகையிட்ட போது எடுக்கப்பட்ட புகைப்படம்
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தாலுகா நரசிங்கராயன்பேட்டை எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் வசித்து வரும் பொதுமக்கள், தங்களுடைய ஆதார் அட்டை, ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட அடையாள அட்டைகளுடன் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து திடீரென முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனே அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது அவர்கள் கூறுகையில், நாங்கள் நரசிங்கராயன் பேட்டை எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் 31 குடும்பத்தினர் வாடகை வீட்டில் பல ஆண்டுகளாக வசித்து வருகிறோம். எங்களுக்கென்று சொந்தமாக வீட்டுமனையோ, வீடோ எதுவும் கிடையாது. நாங்கள் இலவச வீட்டுமனை பட்டா கேட்டு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்து கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாகியும் இதுநாள் வரை எங்களுக்கு பட்டா வழங்கப்படவில்லை. இதுசம்பந்தமாக பலமுறை செஞ்சி தாலுகா அலுவலகத்திற்கு நாங்கள் சென்று முறையிட்டும் எங்களுக்கு பட்டா வழங்காமல் அங்குள்ள அதிகாரிகள் அலைக்கழித்து வருகிறார்கள். ஆகவே எங்கள் மனுவின் மீது உரிய நடவடிக்கை எடுத்து எங்களுக்கு வீட்டுமனை பட்டா விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தவறும் பட்சத்தில் அரசின் அடையாள அட்டைகளை மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைப்போம். என்றனர். மேலும் அவர்கள் மேற்கண்ட அரசின் அடையாள அட்டைகளை மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்க சென்றனர். அதற்கு அங்குள்ள அதிகாரிகள், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, விரைவில் பட்டா கிடைக்க ஏற்பாடு செய்வதாகவும், அரசு வழங்கிய அடையாள அட்டைகளை இதுபோன்று ஒப்படைக்கக்கூடாது என்றும் அறிவுறுத்தினர். அதன் பின்னர் அவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இலவச வீட்டுமனை பட்டா கேட்டு பொதுமக்கள் அரசின் அடையாள அட்டைகளை ஒப்படைக்க முயன்றதால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News