திருட்டு வழக்கில் கல்லூரி மாணவர் கைது

திருப்பூரில் திருட்டு வழக்கில் கல்லூரி மாணவரை வடக்கு காவல் நிலைய போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Update: 2024-06-01 09:58 GMT

திருட்டு

திருப்பூர் அவிநாசி சாலை பகுதியைச் சேர்ந்தவர் பிரபாகரன் (40). இவர் புஷ்பா தியேட்டர் அருகே காம்ப்ளக்ஸ் கட்டி கடைகளை வாடகைக்கு விட்டுள்ளார். அதே காம்ப்ளக்ஸில் பிரபாகரன் சிசிடிவி கடை வைத்து நடத்தி வந்துள்ளார். கடந்த வருடம் ஏப்ரல் மாதம் 27ஆம் தேதி பிரபாகரன் கடையில் இருந்த ரூ. 52,000 பணம் கொள்ளை அடிக்கப்பட்டது. இது தொடர்பாக பிரபாகரன் வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

காம்ப்ளக்சில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவையும் கைப்பற்றி அதில் பதிவான நபரை தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று பல்லடம் சாலை வீரபாண்டி பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமான முறையில் சுற்றித் திரிந்த நபரை விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர் முன்னுக்கு பின் முரணான தகவலை தெரிவித்ததால் போலீசார் அவரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

விசாரணையில் அவர் பெருமாநல்லூர் சாலை சாந்தி தியேட்டர் பகுதியைச் சேர்ந்த நவீன் குமார் ( 19 )என்பதும் கல்லூரி மாணவரான இவர் கடந்த வருடம் அவிநாசி சாலை புஷ்பா தியேட்டர் அருகே பிரபாகரனுக்கு சொந்தமான கடையில் பணத்தை கொள்ளை அடித்ததும் தெரியவந்தது. ஏற்கனவே பிரபாகரனிடம் பணிபுரிந்து வந்த நிலையில் பணியை விட்டு நிறுத்திய பிறகு திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார். உடனடியாக நவீன் குமாரை கைது செய்த காவல்துறையினர் அவரிடம் இருந்த 25 ஆயிரம் ரூபாய் பணத்தையும் கைப்பற்றியுள்ளனர்.

Tags:    

Similar News