கணக்கு பாடம் புரியாததால் கல்லூரி மாணவர் தற்கொலை
குமரியில் கணக்கு பாடம் புரியாததால் கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்டது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
குமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள முத்தலக்குறிச்சி அம்பலத்தடிவிளை பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவருடைய இளைய மகன் அஜய் நாகர்கோவிலில் உள்ள ஒரு என்ஜினியரிங் கல்லூரியில் கணினி அறிவியல் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் அஜய் வீட்டில் சாப்பிட்டு விட்டு தனது அறைக்கு தூங்க சென்றார். நேற்று காலையில் வெகுநேரமாகியும் அஜய் அறையை விட்டு வெளியே வரவில்லை. இந்தநிலையில் தாய் சிந்து, அஜய் அறை கதவை தட்டினார். ஆனால் கதவு திறக்கப்படவில்லை. உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. இதனால் சந்தேகமடைந்த சிந்து, அருகில் வசிப்பவர்களின் உதவியுடன் ஜன்னல் கதவை உடைத்து உள்ளே பார்த்த போது அறையில் உள்ள கொக்கியில் சேலையால் தூக்கில் தொங்கிய நிலையில் அஜய் அசைவற்று கிடந்தார். தொடர்ந்து உள்பக்கம் பூட்டப்பட்டிருந்த அறைக்கதவை திறந்து சிகிச்சைக்காக தக்கலைஅரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு டாக்டர்கள் பரிசோதித்த போது, ஏற்கனவே அஜய் இறந்து விட்டதாக தெரிவித்தனர். தக்கலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்கு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் விசாரணையில் அஜய்க்கு கணித பாடம் புரியாததால் அவர் குழப்பத்தில் இருந்துள்ளார் என்றும், இதை அவர் தனது சித்தியிடம் கூறி, கல்லூரிக்கு செல்ல விருப்பம் இல்லை என கூறியதாகவும், பெற்றோரிடம் சொன்னால் வெளிநாட்டில் இருக்கும் தந்தை கோபப்படுவார் என பயந்து அஜய் தூக்கில் தொங்கி உயிரை மாய்த்திருக்கலாம் என கூறப்படுகிறது.